13 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய கண்மாய்
சிங்கம்புணரி அருகே 13 ஆண்டுகளுக்கு பிறகு கண்மாய் நிரம்பியதால் கிராம மக்கள் மலர் தூவி வழிபாடு நடத்தினர்.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி அருகே 13 ஆண்டுகளுக்கு பிறகு கண்மாய் நிரம்பியதால் கிராம மக்கள் மலர் தூவி வழிபாடு நடத்தினர்.
சிறுமருதூர் கண்மாய்
சிங்கம்புணரி அருகே எஸ்.வையாபுரிபட்டி ஊராட்சியில் கடப்பன் கண்மாய் என்னும் சிறுமருதூர் கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் சுமார் 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட பொதுப்பணித்துறைக்கு சொந்தமானதாகும். இக்கண்மாய் பல லட்ச ரூபாய் செலவில் சமீபத்தில் சீரமைக்கப்பட்டு மடை கட்டப்பட்டது. இதன்மூலம் சிறு மருதூர், மேட்டுப்பட்டி, எஸ்.வையாபுரிபட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த சுமார் 280 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்படும் வகையில் கண்மாய் ஆழப்படுத்தப்பட்டு சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக திண்டுக்கல் மாவட்டம் கரந்தமலை பகுதியில் பெய்து வந்த கனமழையின் காரணமாகவும், சிங்கம்புணரி பகுதியில் தொடர்ச்சியாக பெய்த கன மழையாலும் பாலாற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக காணப்பட்டது. மாவட்ட எல்லை பகுதியான மேலப்பட்டி, பிள்ளையார்பட்டி பகுதியிலிருந்து வரக்கூடிய பாலாற்று தண்ணீரை பிரித்து 13 ஆண்டுகளுக்கு பிறகு சிறுமருதூர் கண்மாய்க்கு எஸ்.வையாபுரிபட்டி ஊராட்சிக்குட்பட்ட கிராம மக்கள் முயற்சியால் கொண்டு வரப்பட்டது.
மலர் தூவி வழிபாடு
பாலாற்றில் நீர்வரத்து அதிகமான நிலையில் சிறு மருதூர் கண்மாய்க்கு தண்ணீர் வந்து கண்மாய் முழு கொள்ளளவை எட்டியது. தொடர்ந்து மறுகால் வழியாக தண்ணீர் வெளியேறியது. 13 ஆண்டுகளுக்கு பிறகு சிறுமருதூர் கண்மாய் முழு கொள்ளளவை எட்டி மறுகால் பாய்ந்ததை பார்த்து மகிழ்ச்சி அடைந்த சிறுமருதூர், மேட்டுப்பட்டி, எஸ்.வையாபுரிபட்டி கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் ஒன்றிணைந்து கண்மாய் கடைமடை பகுதியில் வர்ண பகவானுக்கு சிறப்பு பூஜை செய்தனர். ேமலும் அவர்கள் தண்ணீரில் மலர் தூவி வழிபட்டனர்.