சி முட்லூரில் கன்னி திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு


சி முட்லூரில் கன்னி திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 27 Jan 2023 12:15 AM IST (Updated: 27 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சி.முட்லுரில் கன்னி திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கடலூர்

புவனகிரி,

சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் கிராமத்தில் கன்னி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி, பொங்கல் பண்டிகை முடிந்து 3-வது நாள் கன்னி திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு வீடுகளிலும் களிமண்ணால் செய்யபப்பட்ட கன்னிசாமி சிலைகள் வைத்து பூஜை செய்வார்கள்.

இதில் திருமணம் ஆகாத ஒவ்வொரு கன்னிப் பெண்கள், ஆண்களும் நெய் உள்ளிட்ட பொருட்கள் வைத்து படைத்து வழிபடுவார்கள். தொடர்ந்து 9-வது நாள் இரவு படைக்கப்பட்ட சிலைகளை பெண் மற்றும் மாப்பிள்ளையாக தெருமுனையில் வைத்து பூஜை செய்வார்கள்.

திருமணம் ஆகும் என்பது ஐதீகம்

அதை தொடர்ந்து 10-வது நாள் திருமணம் ஆகாத பெண்கள், ஆண்கள், அந்த கன்னி சிலைகளை தலையில் சுமந்து அந்த கிராமம் அருகே உள்ள வெள்ளற்றில் எடுத்து சென்று கரைப்பது வழக்கம். இவ்வாறு செய்வது மூலம் திருமணம் ஆகிவிடும் என்பது கிராம மக்களிடையே ஐதீகமாக இருக்கிறது. அந்த வகையில் சி.முட்லூரில் இன்றும் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டுக்கான விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி, கன்னிசாமி சிலைகளை வைத்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து 10-வது நாளான நேற்று பூஜை செய்யப்பட்ட சிலைகளை சுமந்தபடி கிராமத்தில் ஊர்வலமாக சென்று, வெள்ளாற்றில் சிலையை கரைத்தனர். முன்னதாக தங்களது வேண்டுதல் நிறைவேற வேண்டி சிலைகளுக்கு பூஜை செய்தும், கும்மியடித்தும் சாமி தரிசனம் செய்தனர். இதில் சுற்றிலும் உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமத்து மக்கள் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக திருவிழாவையொட்டி சி.முட்லூரில் சுமார் 3000 பேருக்கு ஒன்றிய குழு துணை தலைவர் வாசுதேவன், தமிழ் மாநில காங்கிரஸ் நகர செயலாளர் ரஜினிகாந்த் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story