சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடியது கன்னியாகுமரி
தொடர் மழை காரணமாக சுற்றுலா பயணிகள் இன்றி கன்னியாகுமரி வெறிச்சோடியது.
கன்னியாகுமரி:
தொடர் மழை காரணமாக சுற்றுலா பயணிகள் இன்றி கன்னியாகுமரி வெறிச்சோடியது.
உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் சுற்றுலாவுக்காக வருகை தருகிறார்கள். அந்த வகையில் கடந்த 4 நாட்களாக தொடர் விடுமுறை மற்றும் காலாண்டு தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்த வண்ணம் இருந்தது.
இந்தநிலையில் தற்போது விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதாலும், குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் சுற்றுலா பயணிகள் வருகை அடியோடு குறைந்துவிட்டது. இதனால் நேற்று கன்னியாகுமரி சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. பகவதியம்மன் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது. முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரைப்பகுதி, காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், கடற்கரையில் உள்ள பொழுதுபோக்கு பூங்காக்கள், அரசு பழ தோட்டத்திலுள்ள சுற்றுச்சூழல் பூங்கா, அரசு அருங்காட்சியகம் போன்றவை சுற்றுலாப் பயணிகளின் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் கடைகளில் வியாபாரம் இன்றி வியாபாரிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.