கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியது
விடுமுறை தினத்தையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
விடுமுறை தினத்தையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
சுற்றுலா தலம்
உலக புகழ் பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும்.
இந்தநிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அதிகாலையில் சூரிய உதயம் பார்க்க முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் திரண்டு நின்றனர். ஆனால், நேற்று மேகமூட்டம் காரணமாக சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரியவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
விவேகானந்தர் மண்டபம்
தொடர்ந்து சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட படகு துறையில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டனர்.
கன்னியாகுமரியில் நேற்று காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, சன்செட் பாயிண்ட், அரசு அருங்காட்சியகம், சுற்றுச்சூழல் பூங்கா உள்பட அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், சுற்றுலா பாதுகாவலர்களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
-