காரைக்கால் மீனவர்களின் விசைப்படகு பறிமுதல்


காரைக்கால் மீனவர்களின் விசைப்படகு பறிமுதல்
x

காரைக்கால் மீனவர்களின் விசைப்படகு பறிமுதல்

நாகப்பட்டினம்

நாகை அருகே இரட்டைமடி வலையை பயன்படுத்தி கடலில் மீன் பிடித்த காரைக்கால் மீனவர்களின் விசைப்படகை மீன்வளத்துறையினர் பறிமுதல் செய்தனர். படகில் இருந்த 14 மீனவர்களை விசாரணைக்காக நாகை துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர்

படகுகளை சிறைபிடிக்க முடிவு

மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இரட்டை மடி வலைகள் மற்றும் சுருக்கு மடி வலைகளை தமிழக அரசு கடலில் பயன்படுத்த தடை விதித்துள்ளது. தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை காரைக்கால் மாவட்ட மீனவர்கள் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து நாகை, காரைக்கால் மாவட்ட மீனவர்கள் கூட்டத்தில் இரட்டை மடி வலைகளை பயன்படுத்தும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முடிவு எடுக்கப்பட்டது.

இதனை மீறி காரைக்கால் பகுதியில் ஒரு சில மீனவர்கள் தமிழக கடல் பகுதியில் இரட்டைமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பதாக நாகை அக்கரைப்பேட்டை மீனவர்கள் மீன்வளத்துறை மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் புகார் அளித்தனர். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் நேற்று நாகை தாலுகா மீனவர்கள் கூட்டம் நடந்தது. இதில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இரட்டை மடி வலைகளை பயன்படுத்தும் காரைக்கால் மாவட்ட மீனவர்களின் படகுகளை கடலில் சிறைபிடித்து நாகை துறைமுகம் கொண்டு வருவது என முடிவெடுக்கப்பட்டது.

விசைப்படகு பறிமுதல்

இதையடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மீன்பிடி துறைமுகத்தில் குவித்தனர். அப்போது நாைக அக்கரைப்பேட்டை மீனவர்கள் தடையை மீறி இரட்டை மடி வலைகளை பயன்படுத்தும் மீனவர்களின் விசைப்படகுகளை சிறைபிடிக்க சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மீன்வளத்துறை உதவி இயக்குனர் ஜெயராஜ் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் ஆகியோர் சிறைபிடிக்க சென்ற மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இந்திய கடலோர பாதுகாப்பு குழுமம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை உதவி இயக்குனர் மீனவர்களிடம் உறுதி அளித்தார். இரட்டை மடி வலைகளை பயன்படுத்தும் படகுகள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை காலவரையற்ற போராட்டத்தில் நாகை தாலுகா மீனவர்கள் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

நாகை அருகே இரட்டை மடி வலைகளை பயன்படுத்தி கடலில் மீன்பிடித்த காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரிமேடு கிராமத்தை சேர்ந்த படகில் நேற்று இந்திய கடற்படை அதிகாரிகள் மற்றும் மீன்வளத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அந்த படகில் இரட்டை மடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்தது தெரியவந்தது.

இதையடுத்து விசைப்படகை பறிமுதல் செய்த மீன்வளத்துறை அதிகாரிகள், படகில் இருந்த காரைக்காலை சேர்ந்த 14 மீனவர்களையும் விசாரணைக்காக நாகை துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர். நடுக்கடலில் நடந்த சோதனையில் தடைசெய்யப்பட்ட இரட்டைமடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்து கொண்டிருந்த காரைக்காலை சேர்ந்த மற்றொரு விசைப்படகும், அதில் இருந்த 10-க்கும் மேற்பட்ட மீனவர்களும் கடல் வழியாக அங்கிருந்து தப்பி காரைக்கால் சென்றனர்.


Next Story