கரிய ராமர் கோவில் தேரோட்டம்
பெத்தநாயக்கன்பாளையம்:-
கருமந்துறையில் கரிய ராமர் கோவில் உள்ளது. இந்த பகுதியில் உள்ள மேல்நாடு, கீழ்நாடு, வடக்கு நாடு, தெற்கு நாடு உள்ளிட்ட 98 கிராம மக்கள் இந்த கடவுளை தங்கள் குலதெய்வமாக வழிபாடு நடத்தி வருகின்றனர். ஆண்டுதோறும் கரியராமருக்கு மலைவாழ் மக்கள் சேர்ந்து தேர்த்திருவிழாவை விமரிசையாக நடத்துவது வழக்கம். அதன்படி நேற்று காலை 10 மணிக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு பலவண்ண மலர்களால் கரியராமர் சாமி அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஊர் கிராம மக்கள் அனைவரும் ஒன்றாக திரண்டு தேங்காய், பழம், மாவிளக்கு போன்றவைகளை சாமிக்கு படையல் இட்டு வழிபாடு நடத்தினர். பின்னர் அலங்கரிக்கப்பட்டிருந்த தேரில் கரியராமர் சாமி வைக்கப்பட்டு கோவிலை சுற்றி தேர் இழுத்துவரப்பட்டது. ஆண்களும், பெண்களும் மலைவாழ் மக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு இந்த தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதில் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெய்சங்கரன், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய குழு தலைவர் சின்னத்தம்பி, பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் மோகன், ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் கருத்திருமன், கூட்டுறவு வங்கி தலைவர்கள் மோகன், குருசாமி உள்பட பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு வடம் பிடித்துஇழுத்தனர். தேர்த்திருவிழாவின் போது மானாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், போன்ற பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.