கர்நாடக மாநில வாலிபர் கிணற்றில் மூழ்கி பலி


கர்நாடக மாநில வாலிபர் கிணற்றில் மூழ்கி பலி
x
தினத்தந்தி 10 July 2023 12:17 AM IST (Updated: 10 July 2023 2:28 PM IST)
t-max-icont-min-icon

ஜோலார்பேட்டை அருகே குளிக்க சென்றபோது கர்நாடக மாநில வாலிபர் கிணற்றில் மூழ்கி பலியானார்.

திருப்பத்தூர்

கூலி தொழிலாளி

கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியைச் சேர்ந்தவர் சாமி. இவரது மகன் ஸ்ரீராம் (வயது 27), இவர் பெங்களூரு பகுதியில் கூலி வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் உடன் பணிபுரியும் தமிழக நண்பர்களுடன் நேற்று முன்தினம் விடுமுறையில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த சின்னகம்பியம்பட்டு பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் வீட்டிற்கு வந்தார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த பார்த்திபன் என்பவருக்கு சொந்தமான 50 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் தனது நண்பர் விக்ரம் என்பவருடன் நேற்று காலை கிணற்றில் குளிக்க சென்றனர்.

கிணற்றில் மூழ்கி பலி

ஸ்ரீராமுக்கு நீச்சல் தெரியாததால் கிணற்றில் விக்ரம் குளிப்பதை கிணற்றின் அருகில் இருந்து பார்த்து கொண்டிருந்தார். பின்னர் ஸ்ரீராம் கிணற்றில் குதித்து உள்ளார். அப்போது நீச்சல் தெரியாததால் அவர் தண்ணீரில் தத்தளித்தார். இதனை கண்ட விக்ரம் அவரை காப்பற்ற முயன்றார். ஆனால் ஸ்ரீராம் தண்ணீரில் மூழ்கினார்.

இதனால் விக்ரம் கூச்சல் போட்டார். உடனடியாக அருகில் இருந்த பொதுமக்கள் கிணற்றில் குதித்து காப்பற்ற முயன்றனர். பின்னர் அப்பகுதி பொது மக்கள் உடனடியாக திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) முருகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 1 மணி நேரம் போராடி ஸ்ரீராம் உடலை பிணமாக மீட்டனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நண்பர் வீட்டிற்கு வந்த கர்நாடக மாநில வாலிபர் கிணற்றில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story