விளையாட்டு மைதானங்களை விட பயிற்றுனர்களே அவசியம் தேவை கல்லூரி விழாவில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேச்சு
விளையாட்டு மைதானங்களை விட பயிற்றுனர்களே அவசியம் தேவை என கல்லூரி ஆண்டு விழாவில் பங்கேற்ற கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.
தேவகோட்டை
விளையாட்டு மைதானங்களை விட பயிற்றுனர்களே அவசியம் தேவை என கல்லூரி ஆண்டு விழாவில் பங்கேற்ற கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.
கல்லூரி ஆண்டு விழா
தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் 53-ம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவை கல்லூரி தலைவர் அண.லெட்சுமணன் செட்டியார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கல்லூரி செயலர் ஏ.எஸ்.சாந்தி ஆச்சி முன்னிலை வகித்தார்.கல்லூரி முதல்வர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக சிவகங்கை மாவட்ட துணை சூப்பிரண்டு சிபி சாய் சவுந்தர்யன் கல்லூரி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்து பேசினார்.
நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேசும் போது,
பயிற்றுனர்கள் தேவை
விளையாட்டு மைதானங்களை விட அதை பயிற்றுவிக்கும் பயிற்றுநர்களே இந்தியாவிற்கு தேவை. விளையாட்டு மைதானங்களை வடிவமைத்து அதை பராமரிக்கவோ அதில் பயிற்றுவிக்கவோ பயிற்றுனர்கள் இல்லையென்றால் எப்போதும் நாம் மாற்றத்தை கொண்டு வர முடியாது. ஆகவே மாணவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தையும் மனவலிமையை தரும் விளையாட்டுகளை பெற்றோர்கள் ஊக்கவிக்க வேண்டும். மற்ற பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு தரும் மதிப்பை விளையாட்டு துறையை சார்ந்த ஆசிரியர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்றார்.
சாம்பியன்
முன்னதாக விழாவில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி வாழ்த்துரை வழங்கினார். ஆண்கள், பெண்கள் பிரிவுகளிலும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் கல்லூரியின் வணிகவியல் துறை மாணவர்கள் வென்றனர். கல்லூரி உடற்கல்வி இயக்குனர் லூர்துராஜ் 2022-2023-ம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையை வாசித்து இந்த ஆண்டில் கல்லூரியின் மூலம் பயிற்சி பெற்று பல்கலைக்கழக தடகளம், கூடைப்பந்து, மற்றும் கைப்பந்து போட்டிகளுக்கான விளையாட்டு வீரர்களாக தேர்வான 17 மாணவர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
விழாவில் கல்லூரியின் முன்னாள் முதல்வரும் தற்போதைய கல்லூரியின் சுயநிதி பிரிவு இயக்குனருமான பேராசிரியர் அருணாச்சலம், முன்னாள் கல்லூரி முதல்வர் சேவியர், தேவகோட்டை ஆனந்தா கல்லூரி முதல்வர் ஜான் வசந்தகுமார், தேவகோட்டை நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம், நகர்மன்ற துணை தலைவர் ரமேஷ், நகர்மன்ற உறுப்பினர்கள் ஐயப்பன், மகேஷ்குமார், நகர் காங்கிரஸ் பிரமுகர்கள் அப்பச்சி சபாபதி, வக்கீல் சஞ்சய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.