திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 27 Nov 2022 10:53 PM IST (Updated: 28 Nov 2022 12:12 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 6-ந் தேதி கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

திருவண்ணாமலை



திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 6-ந் தேதி கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

கார்த்திகை தீபத்திருவிழா

உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் கலந்து கொள்ள நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக கோவில் வளாகத்திற்குள்ளேயே சாமி உலா மற்றும் தேரோட்டம் போன்றவை நடைபெற்றது.

இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வுகள் செய்யப்பட்டு உள்ளதால் மாடவீதியில் சாமி வீதி உலாவுடன் விழா நடைபெற்று வருகின்றது. தீபத்திருவிழாவை முன்னிட்டு கடந்த 24-ந் தேதி துர்க்கை அம்மன் உற்சவமும், 25-ந் தேதி பிடாரி அம்மன் உற்சவமும், நேற்று முன்தினம் விநாயகர் உற்சவமும் நடைபெற்றது. உற்சவங்களில் விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்தனர்.

கொடியேற்றம்

இந்த நிலையில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றம் நேற்று காலை நடந்தது. இதைமுன்னிட்டு அதிகாலையே கோவில் நடை திறக்கப்பட்டு, பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது.

கொடியேற்றத்தை காண அதிகாலை 4 மணி முதலே கோவிலில் பக்தர்கள் குவிய தொடங்கினர். காலை 6 மணியளவில் விநாயகர், சுப்பிரமணியர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் சாமி சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தின் அருகே மங்கள வாத்தியங்கள் முழங்க ஆடியபடி எழுந்தருளினர்.

அதைத் தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத தங்க கொடி மரத்தில் காலை 6.12 மணி அளவில் கொடியேற்றப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் 'அண்ணாமலையாருக்கு அரோகரா' என்று பக்தி கோஷம் எழுப்பினர்.

பஞ்சமூர்த்திகள் வீதியுலா

கொடியேற்றத்தை தொடர்ந்து காலை 10 மணி அளவில் ராஜகோபுரத்தின் முன்பு உள்ள 16 கால் மண்டபத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர். அதன்பின் வெள்ளி விமானத்தில் உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரரும், கண்ணாடி விமானங்களில் விநாயகர், பராசக்தி அம்மன், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகியோரும் மாடவீதியை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.


அப்பகுதியில் உள்ள பக்தர்கள் தங்கள் வீடுகளின் அருகே சாமி வந்ததும் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். இரவில் பஞ்சமூர்த்திகள் மூஷிகம், மயில், வெள்ளி அதிகார நந்தி, ஹம்ச, சிம்ம வாகனங்களில் வீதி உலா வந்தனர்.

சாமி வீதியுலாவின் போது துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா நாட்களில் தொடர்ந்து தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகர் வீதி உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் வெவ்வேறு வாகனங்களில் நடக்கிறது. தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வெள்ளி ரதம் வருகிற 2-ந்தேதி இரவு நடக்கிறது. முன்னதாக அன்று காலையில் 63 நாயன்மார்கள் வீதிஉலா நடக்கிறது.

மகா தீபம்

3-ந்தேதி பஞ்சமூர்த்திகள் தேரோட்டமும், காலை 5.30 மணிக்கு மேல் 7 மணிக்குள் விநாயகர் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. அன்று, முதலில் விநாயகர் தேரும், அடுத்து சுப்பிரமணியர் தேரும் இழுக்கப்படுகிறது. தொடர்ந்து பெரியதேர் இழுக்கப்படும். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை இழுத்து வழிபடுவர். பெரிய தேர்நிலைக்கு வந்ததும் இரவில் அம்மன் தேர் இழுக்கப்படும். அந்த தேரை பெண்கள் மட்டுமே இழுப்பார்கள். அதைத்தொடர்ந்து சண்டிகேஸ்வரர் தேர் இழுக்கப்படும்.

தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் வருகிற 6-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ஏற்றப்படுகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு கோவிலுக்கு பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படுகிறது. இந்த ஆண்டு 30 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பங்கேற்றவர்கள்

கொடியேற்ற நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் முருகேஷ், போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் அசோக்குமார், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், அருணை கன்ஸ்ட்ரக்சன் துரை வெங்கட், மாவட்ட பிரதிநிதி குட்டி புகழேந்தி, நகர்ப்புற கூட்டுறவு வங்கி தலைவர் குணசேகரன், அ.தி.மு.க. நகர செயலாளர் செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கோவிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவையொட்டி திருவண்ணாமலை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.


Next Story