கார்த்திகை தீப அகல்விளக்குகள்
கார்த்திகை தீப அகல்விளக்குகள்
கார்த்திகை தீபத்திருநாள், நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. 8-ந்தேதி வரை 3 நாட்கள் தமிழக இல்லங்களில் எல்லாம் தீபங்கள் ஒளிரும்.
அகல் விளக்குகள்
மண்பானைகள், கலைநயமிக்க கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் களிமண்ணில் வடிவமைக்கப்பட்ட அகல்விளக்குகள் குவிந்திருக்கின்றன. சாலை ஓரங்களிலும் அகல்விளக்கு கடைகள் முளைத்திருக்கின்றன.
விளக்குகள் 3 அங்குலம் முதல் 1 அடி உயரம் வரை விற்பனைக்கு வந்திருக்கின்றன. மண் குத்துவிளக்கு, தட்டு விளக்கு, சரவிளக்கு, 5 முக விநாயகர் விளக்கு, தேங்காய் வடிவ விளக்கு என்று ஒவ்வொரு விளக்கிற்கும் ஒவ்வொரு பெயர் சூட்டி இருக்கிறார்கள்.
ரெடிமேடு விளக்குகள்
இவை ஒருபுறம் இருக்க தற்போது மெழுகு விளக்குகள், கிளே விளக்குகள், ரெடிமேட் நெய் விளக்குகள், பீங்கான் விளக்குகள் என பல்வேறு மாடல்களில் விளக்குகள் சந்தைக்கு வந்துள்ளன.
இதனால் களிமண்ணால் செய்யப்படும் பாரம்பரிய அகல்விளக்குகள் அவைகளோடு போட்டியிட முடியாமல் மெல்ல மெல்ல அடையாளத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சமையல் பாத்திரங்கள், அலங்காரப்பொருட்களில் உலோகங்களின் ஆதிக்கம் ஏற்பட்ட பின்னர் மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த தொழிலை நம்பி இருந்தவர்கள் கட்டுமானம் போன்ற இதர வேலைகளுக்குச் செல்லும் நிலைமை ஏற்பட்டது. இந்த நிலையில் புதுவரவுகளான ரெடிமேடு விளக்குகளால் அகல்விளக்கு தயாரிப்பு தொழில் அதிகளவில் பாதிப்பைச் சந்தித்து வருவதாக தொழிலாளர்களும், விற்பனையாளர்களும் வேதனையை வெளிப்படுத்துகின்றனர்.
விற்பனை பாதிப்பு
இதுகுறித்து நெல்லை டவுனை சேர்ந்த வியாபாரி மாரியப்பன் கூறியதாவது:-
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்தி ஆகியவை மண் அகல்விளக்கு விற்பனையை பாதித்து உள்ளது. இருந்தபோதிலும் பாரம்பரியமாக மண் விளக்கில், எண்ணெய் ஊற்றி திரி போட்டு விளக்கு ஏற்றி வழிபடுகிறவர்கள் ஆர்வமுடன் மண் அகல் விளக்குகளை வாங்கி செல்கிறார்கள்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் மண் அகல் விளக்குகள் பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்படுகிறது. எந்திரங்கள் மூலம் இந்த விளக்குகள் தயாரிப்பதால் பளீச்சென்று காட்சி அளிக்கின்றன. இதில் சாதாரண அகல் விளக்குகள் 5 எண்ணம் ரூ.10-க்கும், பாவை விளக்கு ரூ.50, காமாட்சி விளக்கு ரூ.50, சிம்னி விளக்கு ரூ.50, குபேரன் விளக்கு ரூ.200, விநாயகர் விளக்கு ரூ.120 என பல வகைகளில் விற்பனை செய்யப்படுகிறது.
ஐஸ்வர்யம் கிடைக்கும்
தென்காசியை சேர்ந்த அகல்விளக்கு வியாபாரி சீனிவாசன்:-
நான் களிமண்ணால் செய்யப்பட்ட அனைத்து வகையான அகல் விளக்குகளையும் விற்பனை செய்கிறேன். கொரோனா காலத்துக்கு பிறகு இப்போது விற்பனை நன்றாக உள்ளது. தென்காசி பகுதியில் இந்த அகல் விளக்குகளில் மின்விளக்குகள் வரவில்லை. இதனால் அதன் தாக்கம் எனக்கு தெரியவில்லை. ஆனால் கார்த்திகை மாதம் என்பதால் இப்போது தினமும் ஏராளமானோர் வந்து ஆர்வமாக அகல் விளக்குகளை வாங்கி செல்கிறார்கள். இந்த விளக்குகள் கடலூரில் உற்பத்தி செய்யப்பட்டு இங்கு வருகின்றன. இதேபோல் குஜராத் மாநிலத்தில் இருந்து பளபளப்பான தோற்றத்தில் விளக்குகள் வருகின்றன. தற்போது சில விளக்குகள் 3 எண்ணம் ரூ.10-க்கும், சில விளக்குகள் 4 எண்ணம் ரூ.10-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
தென்காசியை சேர்ந்த சுப்புராஜ்:-
கார்த்திகை மாதம் பெரும்பாலான வீடுகளின் வாசலில் அகல் விளக்குகள் ஏற்றி வைப்பது வழக்கம். பண்டைய காலத்தில் இருந்தே இது நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த மாதம் சபரிமலைக்கு செல்ல மாலை அணிவார்கள். இது ஒரு சிறந்த மாதமாகும். வீட்டில் அகல்விளக்குகளை ஏற்றும்போது, ஐஸ்வர்யம் கிடைக்கும். குடும்பத்துக்கு சிறப்பாக அமையும். அதிலும் களிமண்ணால் செய்த சிறிய அகல் விளக்குகள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். தற்போதைய நாகரிக காலத்துக்கு ஏற்ப மின்விளக்குகள், மெழுகு விளக்குகள் எல்லாம் வருகின்றன. அவை நமது பகுதியில் இன்னும் வந்ததாக தெரியவில்லை. பாரம்பரியமான மண் அகல் விளக்குகளில் ஒளி ஏற்றுவது தான் நல்லது.