வைகாசி மாத கார்த்திகை உற்சவ விழா
பழனி முருகன் கோவிலில் வைகாசி மாத கார்த்திகை உற்சவத்தையொட்டி திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
கார்த்திகை உற்சவம்
பழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் கார்த்திகை உற்சவம் நடைபெற்று வருகிறது. இந்த மாதத்துக்கான (வைகாசி) கார்த்திகை உற்சவ விழா நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது.
பின்னர் 4.30 மணிக்கு விளாபூஜையில் முருகப்பெருமானுக்கு சந்நியாசி அலங்காரமும், 8 மணிக்கு சிறுகாலசந்தி பூஜையில் வேடர் அலங்காரமும் நடைபெற்றது. தொடர்ந்து 9 மணிக்கு காலசந்தி பூஜையில் பாலசுப்பிரமணியர் அலங்காரம், பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையில் வைதீகாள் அலங்காரம் செய்யப்பட்டது.
அதன்பிறகு மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் ராஜஅலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் இரவு 9 மணிக்கு ராக்கால பூஜையில் பல்வேறு வண்ண மலர்களால் சுவாமிக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டது.
விளக்கு பூஜை
கார்த்திகை உற்சவத்தையொட்டி மாலை 6 மணிக்கு கோவில் தெற்கு வெளிப்பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் விளக்கு ஏற்றி வழிபட்டனர். பின்னர் 6.40 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் உட்பிரகாரத்தில் வலம் வந்தார்.
இதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு மேல் தங்கரதத்தில் எழுந்தருளினார். அப்போது சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதையடுத்து தங்கரத புறப்பாடு நடந்தது. இதில் 115 பக்தர்கள் தலா ரூ.2 ஆயிரம் செலுத்தி பங்கேற்றனர்.
கார்த்திகை உற்சவத்தையொட்டி பழனி முருகன் கோவிலில் நேற்று காலை முதலே பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்தனர். இதனால் தரிசன வழிகள், மலைக்கோவிலுக்கு செல்வதற்கான மின்இழுவை ரெயில்நிலையம் ஆகிய இடங்களில் கூட்டம் காணப்பட்டது.