கார்த்திகைதீப அகல்விளக்குகள்


கார்த்திகை தீபத்திருநாள், நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. 8-ந் தேதி வரை 3 நாட்கள் தமிழக இல்லங்களில் எல்லாம் தீபங்கள் ஒளிரும்.

திருப்பத்தூர்

கார்த்திகை தீபத்திருநாள், நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. 8-ந் தேதி வரை 3 நாட்கள் தமிழக இல்லங்களில் எல்லாம் தீபங்கள் ஒளிரும்.

அகல் விளக்குகள்

மண்பானைகள், கலைநயமிக்க கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் களிமண்ணில் வடிவமைக்கப்பட்ட அகல்விளக்குகள் குவிந்திருக்கின்றன. சாலை ஓரங்களிலும் அகல்விளக்கு கடைகள் முளைத்திருக்கின்றன.

விளக்குகள் 3 அங்குலம் முதல் 1 அடி உயரம் வரை விற்பனைக்கு வந்திருக்கின்றன. மண் குத்துவிளக்கு, தட்டு விளக்கு, சரவிளக்கு, 5 முக விநாயகர் விளக்கு, தேங்காய் வடிவ விளக்கு என்று ஒவ்வொரு விளக்கிற்கும் ஒவ்வொரு பெயர் சூட்டி இருக்கிறார்கள்.

ரெடிமேடு விளக்குகள்

இவை ஒருபுறம் இருக்க தற்போது மெழுகு விளக்குகள், கிளே விளக்குகள், ரெடிமேட் நெய் விளக்குகள், பீங்கான் விளக்குகள் என பல்வேறு மாடல்களில் விளக்குகள் சந்தைக்கு வந்துள்ளன.

இதனால் களிமண்ணால் செய்யப்படும் பாரம்பரிய அகல்விளக்குகள் அவைகளோடு போட்டியிட முடியாமல் மெல்ல மெல்ல அடையாளத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சமையல் பாத்திரங்கள், அலங்காரப்பொருட்களில் உலோகங்களின் ஆதிக்கம் ஏற்பட்ட பின்னர் மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த தொழிலை நம்பி இருந்தவர்கள் கட்டுமானம் போன்ற இதர வேலைகளுக்குச் செல்லும் நிலைமை ஏற்பட்டது. இந்த நிலையில் புதுவரவுகளான ரெடிமேடு விளக்குகளால் அகல்விளக்கு தயாரிப்பு தொழில் அதிகளவில் பாதிப்பைச் சந்தித்து வருவதாக தொழிலாளர்களும், விற்பனையாளர்களும் வேதனையை வெளிப்படுத்துகின்றனர்.

அச்சு எந்திரம்

ஆற்காடு திருநீலகண்ட தெருவை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளி செல்வக்குமார் இவரது மனைவி சித்ரா:- நாங்கள் பல தலைமுறைகளாக இந்த மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். இந்தப் பகுதியில் 17 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மண்பாண்டங்கள் தயாரித்து விற்பனை செய்து வந்தோம். தற்போது 5 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் மண்பாண்டங்கள் விற்பனை செய்து வருகிறோம். மண்பானைகள் மற்றும் அகல் விளக்குகள் தயாரிக்க மூலப்பொருளாக விளங்கும் களிமண் ஏரிகளில் இருந்து எடுத்து வர வேண்டும். இதில் பல சிரமங்கள் உள்ளது. எனவே ஒரு சிலர் இந்த தொழிலையே விட்டு விட்டு வேறு தொழிலுக்கு சென்று விட்டனர். கார்த்திகை தீபம் நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட இருக்கிறது. ஆனால் இதுவரை வியாபாரம் சூடு பிடிக்கவில்லை. இதற்கு முன்பு எங்களைப் போன்ற குயவர்கள் தான் மண் பாண்டங்கள், அகல் விளக்குகள் தயாரித்து பொங்கல், தீபாவளி, கார்த்திகை தீபம் ஆகிய பண்டிகை நாட்களில் விற்பனை செய்து வந்தனர். ஆனால் தற்பொழுது அச்சு எந்திரம் மூலம் தயாரிக்கப்படுகின்ற அகல் விளக்குகளை பூக்கடைகள், நாட்டு மருந்து கடைகள், மளிகை கடைகளிலேயே விற்பனை செய்கின்றனர். இதனால் எங்களுக்கு வியாபாரம் குறைந்து விட்டது. மண்பாண்டங்கள் தயாரிக்க அரசு மூலம் மானியத்தில் சக்கரம் வழங்கி உள்ளனர். மேலும் எங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு மானியத்துடன் கூடிய அதிகப்படியான கடன் உதவிகளை வழங்கினால் நன்றாக இருக்கும்.

ஒளி ஏற்ற வாய்ப்பில்லை

ஆரணி பகுதி மண்பாண்ட தொழிலாளர் லலிதா:-நாங்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் இத்தொழிலை நம்பி உள்ளோம். கார்த்திகை மாதத்தில் அகல் விளக்கும், தை மாதத்தில் புது பானைகள், அடுப்பு மற்றும் விநாயகர் சதுர்த்தி அன்று களிமண்ணால் விநாயகர் சிலைகள் செய்து விற்பனை செய்வோம். கடந்த காலங்களில் மண்பாண்டம் செய்வது எங்கள் குலத்தொழிலாக இருந்தது. ஆனால் தற்போது மிஷின் மூலம் மாடல் மாடலாக விளக்குகளை தயாரித்து யார் வேண்டுமானாலும் வியாபாரம் செய்யும் நிலை இருந்து வருகிறது. இதனால் நாங்கள் ஆண்டுதோறும் மிகவும் குறைந்த லாபத்திலேயே விற்பனை செய்து எங்கள் வாழ்க்கையை நடத்தி வருகிறோம். இறைவனுக்கு வெளிச்சம் காட்டும் அகல் விளக்கு தயாரிக்கும் எங்கள் வாழ்வில் ஒளி ஏற்ற வாய்ப்பே இல்லை என்ற நிலைமைதான் உள்ளது. இத்தொழிலை நம்பி இருந்த எங்களது சந்ததிகள் தகவல் தொழில்நுட்பத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு சென்று வருகின்றனர். மண்பாண்ட தொழில் எங்கள் தலைமுறையோடு முடிந்து விடும் என்ற நிலைதான் இருந்து வருகிறது.

விளக்கு ஏற்றுவது ஏன்?

கே.வி.குப்பம் சந்தைமேடு பகுதியைச் சேர்ந்த புனிதா வெங்கடேசன்:- அம்மனுக்கு விளக்கு ஏற்றினால், இருள் நீங்குவது போல் குடும்பத்தில் உள்ள குழப்பங்கள், தீமைகள் ஓடிவிடும் என்பது ஐதீகம். அதிகாலை சூரிய உதய நேரத்திலும், மாலையில் சூரியன் மறையும் நேரத்திலும், வீட்டுக்கு வெளியே விளக்கேற்றி வைப்பது வழக்கம். மார்கழி மாதத்தில் பூசணி இலைமீது பசுவின் சாண உருண்டைகள் வைத்து அதன்மேல் விளக்கேற்றி வைப்பது தொன்று தொட்டு நடந்து வருகிறது. இதன் ஒரு விழாவாக கார்த்திகை மாத தீபத்திருவிழா அன்று தீப ஒளி மலை மீதும், வீட்டு வாசலிலும் ஏற்றிவைத்து இறைவன் ஒளியாக இருக்கிறான் என்பதை உணர்த்த தீப வழிபாடு நடத்தப்படுகிறது. விளக்குகள் ஒரு திரி போட்ட விளக்கு, மூன்று திரி உள்ள விளக்கு, ஐந்து திரி போட்ட விளக்கு என்று பலவகையில் வழிபாட்டுக்குப் பயன்பட்டு வருகிறது. ஒரு திரி விளக்கு இறைவன் ஒருவனே என்பதை காட்டுகிறது. மூன்று திரி விளக்கு மும்மூர்த்திகளாய் இறைவன் விளங்குகிறான் என்பதையும், ஐந்து திரிவிளக்கு பஞ்சபூதங்கள் இறைவனின் வடிவம் என்பதையும் காட்டுகிறது. விளக்கு வைக்கும் நேரத்தில் இறைவன் பெயர்களைச் சொல்லும் மங்களகரமான பாடல்களைப் பாடுதலும், நாம வரிகளை மனம் உருகிச்சொல்வதும் மிகுந்த பயனைத் தரும். விளக்கில் பருத்தி திரிபோட்டு பசுநெய், விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய் போன்ற பல வகையான எண்ணெய்களில் ஒன்றைவிட்டு அவரவர் வேண்டுதலுக்கு ஏற்ப விளக்கு ஏற்றுவது வழக்கம். தீப எண்ணெய் என்ற பெயரில் பல வகையான எண்ணெய்களை கலப்படம் செய்து ஏற்றுவது நல்லது இல்லை.

களிமண் விலை உயர்வு

திருப்பத்தூர் வெங்களாபுரம் பகுதியை சேர்ந்த தேவிகா:-

நாங்கள் பரம்பரையாக இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். வேறு எந்த தொழிலும் தெரியாது. மண்பானை மற்றும் அகல்விளக்கு, அடுப்பு போன்றவை தயார் செய்து விற்று குடும்பம் நடத்தி வருகிறோம். இத்தொழில் 6 மாதம்தான் நடக்கும். மழை பெய்யக்கூடிய 6 மாதங்கள் இத்தொழிலை செய்ய முடியாது. தொழில் செய்ய முடியாத 6 மாதம் நாங்கள் ரேஷன் அரிசியை நம்பித்தான் உள்ளோம். அகல்விளக்கு தயாரிக்க தேவைப்படும் களிமண் ஒரு வண்டிக்கு ரூ.250-தான். ஆனால் அதனை கொண்டு வந்து சேர்ப்பதற்கு கூலியாக ரூ.1,000 செலவழிக்க வேண்டி உள்ளது. மேலும் தேங்காய் மட்டையின் விலையும், மின் கட்டணமும் உயர்ந்து விட்டது. ஒரு நபருக்கு கூலி ரூ.500 கொடுக்க வேண்டி உள்ளது. இதனால் 1,000 விளக்கு தயாரித்து அதனை முழுவதுமாக விற்றால்தான் ரூ.200 லாபம் கிடைக்கும். அதுவும் விற்கவில்லை என்றால் லாபம் கிடையாது. இதை வைத்து நாங்கள் எப்படி குடும்பம் நடத்த முடியும். தற்போது திருப்பத்தூர் பகுதியில் உள்ள பெரும்பாலான ஏரிகளில் தண்ணீர் நிரம்பி உள்ளதால் களி மண் கிடைப்பது கடினமாக உள்ளது. இதனால் போதுமான அளவுக்கு அகல்விளக்குகள் தயாரிக்க முடியவில்லை. இதனால் புதுச்சேரியில் இருந்து அகல் விளக்கு வாங்கி வந்து விற்க வேண்டி உள்ளது. கார்த்திகை தீபத்திற்கு விளக்கு ஏற்ற நாங்கள் அகல் விளக்கு தயாரித்து கொடுக்கிறோம். ஆனால் எங்களின் வாழ்வு மட்டும் வெளிச்சம் பெறாமல் இருட்டிலேயே உள்ளது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் இளவரசு பட்டம் பி.டி.ரமேஷ் குருக்கள்:- இறை வழிபாட்டில், இயற்கையாக தயாரிக்கப்படும் பொருட்களுக்குதான் முக்கியத்துவம் தரவேண்டும். வீட்டில் அகல்விளக்கு ஏற்றி இறைவனை அகத்துக்குள் கொண்டுவருவதே கார்த்திகை தீபத்தின் நோக்கமாக இருக்கிறது. எனவே இந்த தீபத்திருநாளில் களிமண்ணால் தயார்செய்யப்பட்ட அகல்விளக்குகளை ஏற்றிவைப்பதே சாலச்சிறந்தது. அகல்விளக்கில் ஊற்றப்படும் எண்ணெய் கரைதல், திரி கருகுதலில் தியாகம் என்ற வாழ்வியல் தத்துவம் அடங்கி உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story