வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கருமாணிக்கம் எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு
திருவாடானை தாலுகாவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கருமாணிக்கம் எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு செய்தார்.
தொண்டி,
திருவாடானை தாலுகாவில் இந்த ஆண்டு சுமார் 26 ஆயிரத்து 500 எக்டேர் நிலப்பரப்பில் நெற்பயிர் சாகுபடி நடைபெற்றது. ஆனால் போதிய மழை இல்லாததால் விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் என அனைத்து தரப்பினரும் திருவாடானை பகுதியை வறட்சி பகுதியாக அறிவித்து வறட்சி நிவாரணத் தொகை, பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ. கருமாணிக்கம் திருவாடானை தாலுகாவில் உள்ள ஆதியூர், கீழ்ப்பனையூர் நம்புதாளை, அரும்பூர், கூகுடி, கடம்பனேந்தல், டி. நாகனி, நெய்வயல், நெடுமரம், கட்டவிளாகம், அஞ்சுகோட்டை, பழையனக் கோட்டை உள்ளிட்ட ஏராளமான கிராமங்களுக்கு வருவாய்த்துறை அதிகாரிகளுடன் சென்று வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது விவசாயிகள் மழை இல்லாமல் பாதிக்கப்பட்ட நிலையில் கருகிப்போன நெற்பயிர்களை காண்பித்து தங்களின் வேதனைகளை தெரிவித்தனர். இது குறித்து தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று பாதிப்பிற்குரிய நிவாரணம் கிடைத்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எம்.எல்.ஏ. தெரிவித்தார். இந்த ஆய்வின்போது திருவாடானை தாசில்தார் தமிழ்ச்செல்வி, காங்கிரஸ் வட்டார தலைவர்கள் கோடனூர் கணேசன், தட்சிணாமூர்த்தி, மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் முருகானந்தம், மாநில மீனவர் பிரிவு செயலாளர் நம்புதாளை முத்து ராக்கு, ஒன்றிய கவுன்சிலர் கூகுடி கார்த்திகேயன் ராஜா, உள்பட பலர் உடன் சென்றனர்.