ஆத்தூரில் கருணாநிதி நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்க முடிவு
ஆத்தூரில் கருணாநிதி நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆறுமுகநேரி:
ஆத்தூர் நகர பஞ்சாயத்து உறுப்பினர்கள் கூட்டம் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் ஏ.கே. கமால்தீன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் மகேஸ்வரி முருகப்பெருமாள், நகர பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பஞ்சாயத்து எழுத்தர் கருப்பாயி தீர்மானங்களை வாசித்தார்.
கூட்டத்தில், வரவு செலவு கணக்குகள் வாசித்து ஒப்புக்கொள்ளப்பட்டது. நகர பஞ்சாயத்து பகுதி மக்களின் குறைகளை அலுவலகத்தில் மாதம் இருமுறை கேட்டு நிவர்த்தி செய்வது என்றும், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு விழாவை முன்னிட்டு அவரது பெயரில் நினைவு வளைவு ஆத்தூர் பஜாரில் இருந்து நகர பஞ்சாயத்திற்கு ெசல்லும் முகப்பில் அமைப்பது என்றும், ஆத்தூர் நகர பஞ்சாயத்து பகுதிகளில் ஜாதி பெயரால் உள்ள ஐந்து தெருக்களின் பெயர்களை மாற்றி அதற்கு பதிலாக மலர்களின் பெயர்களை வைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் நகர பஞ்சாயத்து கவுன்சிலர்கள், மேற்பார்வையாளர் நாராயணன் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.