ஆரணியில் கருணாநிதி நூற்றாண்டு நினைவு கைத்தறி பட்டு பூங்கா -அமைச்சர் காந்தி அறிவிப்பு
ஆரணியில் கருணாநிதி நூற்றாண்டு நினைவு கைத்தறி பட்டு பூங்கா அமைக்கப்படும் என்று அமைச்சர் காந்தி அறிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக சட்டசபையில் நேற்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை ஆகியவற்றின் மீது எம்.எல்.ஏ.க்கள் வைத்த விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய பின்னர் அமைச்சர் காந்தி வெளியிட்ட அந்த துறைகளுக்கான புதிய அறிவிப்புகள் வருமாறு:-
* அனைத்து ஜவுளிப் பிரிவுகளையும் ஒருங்கிணைத்த மாபெரும் ஜவுளி நகரம் ஒன்று பொது தனியார் கூட்டாண்மையின் அடிப்படையில் சென்னையில் அமைக்கப்படும்.
* தமிழ்நாட்டில் செயல்படும் அண்ணா கூட்டுறவு நூற்பாலை, ஆண்டிப்பட்டி மற்றும் எட்டயபுரம் பாரதி கூட்டுறவு நூற்பாலை ஆகிய நூற்பாலைகளில் ஒவ்வொன்றும் 0.999 மெ.வா. திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவப்படும்.
* இந்த ஆண்டும் சர்வதேச தொழில்நுட்ப ஜவுளி கருத்தரங்கு சென்னையில் நடத்தப்படும்.
கைத்தறி பட்டு பூங்கா
* ஆரணியில் டாக்டர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு கைத்தறி பட்டு பூங்கா அமைக்கப்படும்
* இளைஞர்களுக்கான நெசவு பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் திட்டம் செயல்படுத்தப்படும்
* கூட்டுறவு சங்கங்களில் உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் அடிப்படை கூலியில் 10 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும்.
* சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தில் கைத்தறி நெசவாளர்கள் சந்தா செலுத்த வேண்டிய கால அளவு 25 ஆண்டுகளில் இருந்து 20 ஆண்டுகளாக குறைக்கப்படும்.
* கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள நெசவாளர்கள் இயற்கை எய்தும்போது வழங்கப்படும் ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்
* கைத்தறி நெசவாளர்கள் மிகுதியாக உள்ள பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படும்
* கைத்தறி நெசவாளர்களுக்கு 3,006 தறிகள், உபகரணங்கள் வழங்குதல் மற்றும் 56 நெசவாளர்களுக்கு தறிக் கூடங்கள் அமைத்து தரப்படும்.
பொது வணிகச் சின்னம்
* கைத்தறி நெசவுக்கு பயன்படுத்தப்படும் சிட்டா நூல் சாயம் இடும் முறைக்கு பதிலாக நவீன முறையில் சாயம் இடும் சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.
* தமிழ்நாட்டின் கைத்தறி தயாரிப்புகளுக்கான பொது வணிகச் சின்னம் மற்றும் தொகுப்பாக்கல் உருவாக்கப்படும்.
* கைத்தறி ரகங்களை காட்சிப்படுத்தவும் மற்றும் சந்தைப்படுத்தவும் ஏதுவாக 4 மெட்ரோ நகரங்களில் (சென்னை, பெங்களூரு, ஐதராபாத் மற்றும் டெல்லி) வாங்குவோர் விற்போர் சந்திப்பு நடத்தப்படும்.
* வாடிக்கையாளர்களின் கைத்தறி உபபொருட்களின் தேவையை பூர்த்தி செய்வதற்கு உபபொருட்கள் விற்பனையகம் கோ-ஆப்டெக்ஸ் சென்னையில் அமைக்கப்படும்.
* கோ ஆப் டெக்ஸ் மற்றும் தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் விற்பனை நிலையங்களில் 50 மேசை தறிகள் நிறுவப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.