மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் கருணாநிதி முகம் உருவாக்கம்-உலக சாதனை பட்டியலில் இடம் பிடித்தது


மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் கருணாநிதி முகம் உருவாக்கம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்வு உலக சாதனை பட்டியலில் இடம் பெற்றது.

மதுரை


மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் கருணாநிதி முகம் உருவாக்கம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்வு உலக சாதனை பட்டியலில் இடம் பெற்றது.

கழுகு பார்வை

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரை மாநகராட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது. பசுமை மதுரை திட்டத்தின் கீழ் நகர் முழுவதும் மரக்கன்றுகள் நடும் திட்டம் நடந்து வருகிறது. மதுரை மாநகராட்சியில் உள்ள தூய்மை பணியாளர்கள் மூலம் கருணாநிதி முகம் உருவாக்கும் நிகழ்வு மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் சங்கீதா, கோ.தளபதி எம்.எல்.ஏ, ஆகியோர் தலைமை தாங்கினர். மேயர் இந்திராணி, மாநகராட்சி கமிஷனர் பிரவீன் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சியில் பணியாற்றும் 2 ஆயிரத்து 752 தூய்மை பணியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கருணாநிதி முகத்தை உருவாக்கினர். இந்த நிகழ்வு டிரோன் மூலம் வீடியோ மற்றும் போட்டோ பதிவு செய்யப்பட்டது. அதனை கழுகு பார்வையில் பார்க்கும் போது கருணாநிதியின் உருவம் அழகாக தெரிந்தது.

சான்றிதழ்

இந்த நிகழ்ச்சி, டிரையும்ப் (Triumph World Record) உலக சாதனை பட்டியலில் இடம் பெற்றது. அதற்கான சான்றிதழ் உடனடியாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பூமிநாதன் எம்.எல்.ஏ, துணை மேயர் நாகராஜன், மண்டலத்தலைவர்கள் சரவணபுவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, முகேஷ்சர்மா, சுவிதா, துணை கமிஷனர் முஜிபுர் ரகுமான், நகரப்பொறியாளர் அரசு, நகர்நல அலுவலர் வினோத்குமார், உதவி கமிஷனர்கள் வரலட்சுமி, காளிமுத்தன், திருமலை, சுரேஷ்குமார் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story