சென்னையில் 25 ஏக்கரில் உலகத் தரத்துடன் கருணாநிதி பெயரில் பன்னாட்டு அரங்கம்


சென்னையில் 25 ஏக்கரில் உலகத் தரத்துடன் கருணாநிதி பெயரில் பன்னாட்டு அரங்கம்
x

சென்னையில் 25 ஏக்கர் பரப்பளவில் உலகத் தரத்தில் கருணாநிதி பெயரில் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை,

ஜூன் 3-ந் தேதி (இன்று) மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளாகும்.

அவர் பிறந்து 100 ஆண்டுகள் ஆகும் நிலையில், கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. அந்த விழாவையொட்டி, கருணாநிதி நூற்றாண்டு இலச்சினை வெளியீட்டு விழா நேற்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் நடத்தப்பட்டது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மேற்கு வங்காளத்தின் முன்னாள் கவர்னரும், மகாத்மா காந்தியின் பேரனுமான கோபாலகிருஷ்ண காந்தி பங்கேற்றார். கோபாலகிருஷ்ண காந்தி முன்னிலையில் கருணாநிதி நூற்றாண்டு இலச்சினையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.

கண்காட்சி

மேலும், தமிழ்நாட்டு மக்களின் நலனிற்காக கருணாநிதி ஆற்றிய பணிகள், நிறைவேற்றிய திட்டங்கள் குறித்த குறும்படத்தையும் அவர் வெளியிட்டார். முன்னதாக, செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி அமைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியை அவர் திறந்து வைத்து பார்வையிட்டார். இப்புகைப்படக் கண்காட்சியில், கருணாநிதி ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், சாதனைகள், அவற்றால் மக்கள் பெற்ற பயன்கள், இளமை காலம் முதல் அவர் மேற்கொண்ட அரசியல் பயணம், பல்வேறு அரசியல் மற்றும் முக்கிய தலைவர்களுடனான சந்திப்புகள் போன்றவை குறித்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இப்புகைப்படக் கண்காட்சி இம்மாதம் முழுவதும் மக்கள் பார்வையிட்டு பயன்பெறும் வகையில் நடைபெறும்.

நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தமிழ்நாட்டின் மேன்மைக்கு அடித்தளம் அமைத்தவர்

பெரியாரின் கொள்கை வாரிசான கருணாநிதியை வாழ்த்துவதற்காக மகாத்மா காந்தியின் பேரன் இங்கே வருகை தந்திருக்கிறார். கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு அரசு ஓராண்டு காலம் கொண்டாடத் திட்டமிட்டுள்ளது. அதுகுறித்த இலச்சினையை (லோகோ) வெளியிட்டு இருக்கிறோம். கலைஞர் பெயரால் மாபெரும் நூலகம் மதுரையில் அமைய இருக்கிறது. சென்னையில் அவரது நூற்றாண்டு நினைவு மருத்துவமனை அமைய இருக்கிறது. அரசின் சார்பில் மாதம்தோறும், மாவட்டம்தோறும் விழாக்களை நடத்த இருக்கிறோம்.

இவை புகழ்பாடும் விழாக்களாக மட்டுமல்ல இந்த தமிழ்ச் சமுதாயத்திற்கு அவர் செய்த சாதனைகளை விளக்கும் விழாக்களாக அமைய இருக்கின்றன. பயன்பெற்றோர் பங்கேற்கும் விழாக்களாக அது அமைய இருக்கின்றன. கடந்த 50 ஆண்டுகால தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் மேன்மைக்கும் அடித்தளம் அமைத்தவர் கருணாநிதி. பல்வேறு திட்டங்கள் மூலம் கோடிக்கணக்கான மக்களின் நல்வாழ்க்கையோடு தொடர்புடையவர் அவர்.

குழுக்கள் அமைப்பு

கடந்த சில நாட்களுக்கு முன்னால் சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தமிழ்நாட்டை நோக்கி ஏராளமான தொழில் முதலீடுகளை ஈர்த்து வந்துள்ளேன். தமிழ்நாட்டின் மீதும் தி.மு.க. அரசு மீதும் அவர்கள் வைத்திருக்கக்கூடிய மதிப்பையும் மரியாதையையும் அப்போது அறிந்து கொண்டேன். தமிழ்நாட்டின் வளர்ச்சியையும் உட்கட்டமைப்பு வசதிகளையும் சிங்கப்பூர், ஜப்பான் தொழில் நிறுவனங்கள் அறிந்து வைத்திருக்கின்றன. இந்தியாவில் முதலீடு செய்யும் போது நிச்சயமாக தமிழ்நாட்டில்தான் எங்களது நிறுவனங்களைத் தொடங்குவோம் என்று அவர்கள் உறுதி அளித்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம், கருணாநிதி போட்டுக் கொடுத்த அடித்தளம்தான். கருணாநிதி நூற்றாண்டு விழாவை தமிழ்நாடே கொண்டாட இருக்கிறது. உலகெங்கும் வாழும் தமிழர்கள் கொண்டாட இருக்கிறார்கள்.

நூற்றாண்டு விழாக்களை முன்னெடுக்க அமைச்சர்கள், அரசு உயர் அலுவலர்கள், பல்வேறு துறையைச் சார்ந்த வல்லுநர்கள் கொண்ட குழுக்கள் விரைவில் அமைக்கப்படும். இரண்டொரு நாட்களில் அது வெளியிடப்படும். அந்தக் குழுக்கள், கருணாநிதியின் பன்முக ஆற்றலால் நிகழ்த்தப்பட்டிருக்கக்கூடிய சாதனைகள், மக்கள் பணிகளை கொண்டாடும் விதமாக நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, இந்த ஆண்டு முழுவதும் தமிழ்நாடு முழுக்க மிகச் சிறப்பான வகையில் எழுச்சியோடு நடத்தப்படும்.

பன்னாட்டு அரங்கம்

சென்னையில் உலகத்தரம் வாய்ந்த பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும். உலகளவில் உள்ள கூட்ட அரங்கங்களில் மகத்தான கருத்தரங்க மையமாக இது அமைய வேண்டும். உலகளாவிய தொழில் கண்காட்சிகள், வர்த்தக மாநாடுகள், தொழில்நுட்பக் கூட்டங்கள், உலக நிறுவனங்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள், உலகத் திரைப்பட விழாக்கள் போன்றவை நடக்கும் இடமாகக் 'கலைஞர் கன்வென்சன் சென்டர்' என்ற கருத்தரங்க மையம் அமைய வேண்டும் என எண்ணுகிறேன்.

இது, சிங்கப்பூர், ஜப்பான் பயணத்தின்போது எனக்கு ஏற்பட்ட எண்ணம். மிகப்பெரிய கருத்தரங்க மையங்கள், உலகின் பல நாடுகளில் இருப்பதுபோல தமிழ்நாட்டில் சென்னையில் இருக்கிறது, அதுவும் கலைஞர் பெயரால் இருக்கிறது என்பதுதான் மாபெரும் பெருமையாக இருக்கும். இதுபோன்ற பயன்பாட்டுச் சின்னங்கள், கலைஞர் புகழை நூற்றாண்டுகள் கடந்தும், உலகமெங்கும் எடுத்துச் செல்லும்.

சென்னை நந்தம்பாக்கத்தில் 10 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் வர்த்தக மையம் அமைந்திருந்தாலும், கூடுதலாக கட்டப்பட்டு வரும் வர்த்தக மையம் 12 ஆயிரம் சதுர மீட்டர் அளவில் அது இருந்தாலும், இது வளர்ந்து வரும் தேவைக்கும், எதிர்காலத் தேவைக்கும் போதுமானதாக இல்லை. இதைக் கருத்தில் கொண்டு அமையவுள்ள இந்த கலைஞர் கன்வென்சன் சென்டர் 25 ஏக்கர் பரப்பளவில் 5 ஆயிரம் நபர்கள் அமரக்கூடிய, உலகத்தரத்திலான மாநாட்டு அரங்கம், கண்காட்சி அரங்கங்கள், நட்சத்திரத் தரத்திலான தங்கும் விடுதிகள், உணவகங்கள், ஊடக அரங்கங்கள், பூங்காக்கள், பன்னடுக்கு வாகன நிறுத்தம் ஆகியவற்றை உள்ளடக்கி மிகப்பிரமாண்டமாக உலகத் தரத்தில் சென்னையில் அமைக்கப்படும்.

அறிவுக் குடியிருப்பு

இது, தமிழ்நாட்டு இளைய சக்தியை, அறிவு சக்தியை பூமிப்பந்தில் உள்ள அனைத்து இடங்களுக்கும் அழைத்துச் செல்வதாக அமையும். நான் முதல்வன்' என்ற திட்டத்தின் மூலமாகப் பயிற்சி பெற்று வரும் லட்சக்கணக்கான தமிழ்நாட்டு மாணவர்களுடைய, இளைஞர்களுடைய அறிவுக்குடியிருப்பாக இந்த மையம் அமையுமானால் காலமெல்லாம் கருணாநிதி வாழ்வார்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வரவேற்றார். செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், சாமிநாதன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்ட எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் செல்வராஜ், துறைச் செயலாளர்கள், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் மோகன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கண்காட்சியில் 'தினத்தந்தி' பத்திரிகை

கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி கலைவாணர் அரங்கத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் கருணாநிதியின் அரசியல் வாழ்க்கை தொடர்பான பல்வேறு புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. வீடியோ காட்சியும் திரையிடப்படுகிறது.

கருணாநிதி எழுதியுள்ள புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், அவர் தனது ஆட்சி காலத்தில் நிறைவேற்றிய திட்டங்களின் பெயரை எழுதி, "தொடர்கின்ற வரலாறு, தொடுகின்ற முதல் நூறு" என்ற வாசகத்துடன் அவரது புகைப்படத்துடன் கூடிய பேனர் வைக்காட்டுள்ளது. அதன் முன்நின்று படமெடுத்துக் கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்திரா காந்தி, பெரியார், அண்ணா, ராஜாஜி, எம்.ஜி.ஆர்., என்.டி.ராமராவ் உள்ளிட்ட தலைவர்களுடன் கருணாநிதி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. மக்கள் நலன் சார்ந்த மிக முக்கிய திட்டங்களை கருணாநிதி தொடங்கி வைத்தபோது எடுத்த படங்களும், கருணாநிதியும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் இணைந்து பங்கேற்ற நிகழ்ச்சிகளின் படங்களும் அங்கு காணப்பட்டன.

கண்காட்சி அரங்கத்திற்கு வரும் வழியில், கருணாநிதி வெளியிட்ட அறிவிப்பையும், அவரது அரசுக்கு கிடைத்த பாராட்டையும் செய்தியாக வெளியிட்டு இருந்த 'தினத்தந்தி' பத்திரிகையையும் புகைப்படமாக தமிழக அரசு இடம் பெறச் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story