எண்ணற்ற திட்டங்களை தீட்டி நவீன தமிழகத்தை உருவாக்கியவர் கருணாநிதி


எண்ணற்ற திட்டங்களை தீட்டி நவீன தமிழகத்தை உருவாக்கியவர் கருணாநிதி
x

எண்ணற்ற திட்டங்களை தீட்டி நவீன தமிழகத்தை உருவாக்கியவர் கருணாநிதி என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க. சார்பில் திருவண்ணாமலை டாக்டர் அம்பேத்கர் பகுதி வார்டு எண்-2-ல் உடன்பிறப்புகளாய் இணைவோம் என்ற கட்சி உறுப்பினர் சேர்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன் தலைமை தாங்கினார். தொகுதி பார்வையாளர் டாக்டர் மாலதிநாராயணசாமி, மருத்துவர் அணி துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சரும், கட்சியின் உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உறுப்பினர் சேர்த்தலை தொடங்கி வைத்தார்.

முன்னதாக அவர் பேசுகையில், அரசின் சாதனைகளை தொடர்ந்து பெண்களும், தாய்மார்களும் அதிகளவில் கழகத்தில் இணைவதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இந்த ஆட்சி பெண்களுக்கான தாய்மார்களுக்கான ஆட்சி. குறிப்பாக பெண்களுக்கு கட்டணமில்லா பஸ் பயணம், சுய உதவிக்குழுக்களுக்கு கடன் தொகை ரத்து, அண்ணா பிறந்தநாளில் இருந்து குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்படவுள்ளது. 5 முறை தமிழகத்தில் முதல்- அமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பல எண்ணற்ற திட்டங்களை தீட்டி, நவீன தமிழகத்தை உருவாக்கினார்.

திருவண்ணாமலை தொகுதி இன்று வரை தி.மு.க.வின் கோட்டையாக இருப்பதற்கு காரணம் உங்களை போன்ற உழைக்கும் மக்களின் ஆதரவு தான். நமது மாவட்டத்தில் அதிக அளவில் உறுப்பினர்களை சேர்ப்போம். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்துவோம் என்றார்.

இதில் மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், மாவட்ட துணை செயலாளர் ப்ரியா விஜயரங்கன், நகர நிர்வாகிகள் சி.சண்முகம், டி.வி.எம்.நேரு, துரை.வெங்கட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story