கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தைக்குகர்நாடக மாநில வியாபாரிகள் வராததால் விற்பனை மந்தம்


கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தைக்குகர்நாடக மாநில வியாபாரிகள் வராததால் விற்பனை மந்தம்
x

கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தைக்கு கர்நாடக மாநில வியாபாரிகள் வராததால் விற்பனை மந்தமானது

ஈரோடு

ஈரோடு கருங்கல்பாளையத்தில் வாரந்தோறும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மாட்டுச்சந்தை நடந்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் நடந்த சந்தைக்கு 50-க்கும் மேற்பட்ட கன்றுக்குட்டிகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இவைகள் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனை ஆனது. இந்த நிலையில் நேற்று வழக்கமான சந்தை கூடியது. இந்த சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தங்களது மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர்.

350 பசு மாடுகள், 200 எருமை மாடுகள் என மொத்தம் 550 மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இதில் பசு மாடு ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரையிலும், எருமை மாடு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையிலும் விலை போனது. தமிழ்நாடு மட்டுமின்றி மராட்டியம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் வந்து, விவசாயிகளிடம் நேரடியாக விலை பேசி மாடுகளை பிடித்து சரக்கு வாகனங்களில் ஏற்றி சென்றார்கள். கர்நாடக மாநிலத்தில் நேற்று முன்தினம் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் அங்கிருந்து வியாபாரிகள் யாரும் சந்தைக்கு வரவில்லை. இதன் காரணமாக மாடுகள் விற்பனை மந்தமாக இருந்ததாக சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Next Story