கருப்பணசாமி வீதி உலா
நிலக்கோட்டையில் கருப்பணசாமி முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நிலக்கோட்டை கிளை கருப்பு கட்டி பேட்டையில் தட்சணமாற நாடார் உறவின்முறை பாத்தியப்பட்ட கருப்பணசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத திருவிழா கடந்த 25-ந்தேதி தொடங்கியது. 4 நாட்களாக நடைபெற்ற விழாவின் முதல் நாள் நிகழ்ச்சியாக முனியாண்டி கோவிலில் பூஜை, பொங்கல், நெய்வேத்தியம் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்து. பின்பு பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வந்தனர். 2-வது நாள் பொங்கல் நெய்வேத்தியம், சிறப்பு அபிஷேகமும், மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
3-வது நாள் விழாவில் நேற்று முன்தினம் கோவில் வளாகத்தில் அன்னதானம், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் இரவு செண்டை மேளம் முழங்க வாணவேடிக்கையுடன் சாமி நகர்வலம் நிகழ்ச்சி நடந்தது. இதில் கருப்பணசாமி முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 4-வது நாளாக சிறப்பு அபிஷேகம், பொங்கல் வைத்து பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. விழாவில் திண்டுக்கல், மதுரை, நெல்லை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தட்சணமாற நாடார் உறவின்முறை விழா கமிட்டியாளர்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.