கரூர் மாநகராட்சி சபை கூட்டம்
கரூர் மாநகராட்சி சபை கூட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம். இதேபோல் நகர் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கும் வகையில் நகர சபை மற்றும் மாநகராட்சி சபை கூட்டங்கள் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி உள்ளாட்சிகள் தினமான நேற்று கரூர் மாநகராட்சியில் பகுதி சபா கூட்டங்கள் நடைபெற்றன. கரூர் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளிலும் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. இதில் காலையில் 24 வார்டுகளிலும், மாலையில் 24 வார்டுகளிலும் என மொத்தம் 48 வார்டுகளில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் 3-வது வார்டுக்குட்பட்ட காமராஜர் தெருவில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.
இதேபோல் மற்ற வார்டுகளில் நடைபெற்ற கூட்டங்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் வார்டு பகுதியில் உள்ள குறைகளை கவுன்சிலர்களிடம் தெரிவித்தனர். மேலும் முதியோர் உதவித்தொகை, ரேஷன் கார்டு போன்ற உதவிகளை பெற்று தருமாறு கவுன்சிலர்களிடம் தெரிவித்தனர். மேலும் பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக எழுதி கவுன்சிலர்களிடம் வழங்கினர். இந்த மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கவுன்சிலர்கள் தெரிவித்தனர். கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகளில் உள்ள 192 பகுதிகளிலும் தொடர்ந்து 4 நாட்கள் பகுதி சபா கூட்டம் நடைபெறுகிறது.