கரூர் மாநகராட்சி கூட்டம்: குடிநீர் பிரச்சினை தொடர்பாக கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம்
மாநகராட்சி கூட்டத்தில் குடிநீர் பிரச்சினை தொடர்பாக கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மாநகராட்சி கூட்டம்
கரூர் மாநகராட்சி மாமன்ற கூட்டரங்கில் நேற்று காலை சாதாரண கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் தலைமை தாங்கினார். துணை மேயர் தாரணி சரவணன், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் பேசும் போது, எங்களது வார்டில் குடிநீர் பிரச்சினை அதிகமாக உள்ளது. கடந்த 45 நாட்களில் 3 தடவை மட்டும் தண்ணீர் கொடுக்கப்பட்டு உள்ளது. 8 நாட்களுக்கு ஒருமுறை தான் தண்ணீர் வருகிறது, என்றார்.
மற்றொரு தி.மு.க. கவுன்சிலர் பேசும்போது, எங்களது மண்டலத்தில் உள்ள அனைத்து வார்டுகளிலும் குடிநீர் பிரச்சினை இருக்கிறது. 10 நாட்களுக்கு ஒருமுறைதான் தண்ணீர் வருகிறது. மேலும் குடிநீரில் சாக்கடை நீரும் கலந்து வருவதாக தெரிவிக்கின்றனர். மண்டலம் 2-ல் அதிகாரியை மாற்றி விட்டனர். இதுகுறித்து எங்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை. பிரச்சினைகள் குறித்து எந்த அதிகாரியிடம் கேட்பது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரி யார் என்றுகூட தெரியவில்லை. மேலும் பல்வேறு இடங்களில் தண்ணீர் லீக்காகி செல்கிறது. அதனையும் சரிசெய்யவில்லை. அனைத்து பிரச்சினைகளும் அதிகாரிகளுக்கு தெரியும். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. கிணறுகள் தூர்வாரி பல வருடங்கள் ஆகிறது. டேங்க் சுத்தம் செய்து பல மாதங்கள் ஆகிறது. இதனால் தண்ணீர் எப்போதும் கலங்கலாக வருகிறது. பாகுபாடு இல்லாமல் 4 மண்டலங்களுக்கும் நிதி ஒதுக்க வேண்டும். தண்ணீர் பிரச்சினையை உடனடியாக தீர்க்க வேண்டும், என்றார்.
குடிநீர் பிரச்சினைக்கு முக்கியத்துவம்
மற்றொரு தி.மு.க. கவுன்சிலர் பேசும்போது, சுற்றுசுவர் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுசுவர் அமைப்பதை தற்காலிகமாக நிறுத்திவைத்து விட்டு குடிநீர் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தண்ணீர் பிரச்சினையை தற்போது தீர்த்துவிட்டால், சுற்றுசுவர் அதன்பிறகு கட்டிக்கொள்ளலாம். காவிரி ஆற்றில் கிணறு போட்டு தண்ணீர் கொண்டு வருவதற்கு அந்த நிதியை பயன்படுத்தலாம், என்றார்.
தி.மு.க. கவுன்சிலர்: மண்டலம் 3-ல் 12 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் வருகிறது. தண்ணீர் பிரச்சினை அதிகமாக இருக்கிறது. தண்ணீர் பைப்லைன் அதிகமாக கட்டாகிறது. அதனை சரிசெய்ய வேண்டும், என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கவுன்சிலர் பேசும் போது, 6 மாதங்களுக்கு முன்பு குடிநீர் பிரச்சினை குறித்து பேசினோம். தற்போது குடிநீர் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது. வாட்ஸ் அப்பில் வார்டு பிரச்சினைகள் குறித்து தெரிவிக்க குரூப் ஓப்பன் செய்துள்ளோம். இதில் அதிகாரிகளை இணைத்துள்ளோம். பிரச்சினை குறித்து வாட்ஸ் அப்பில் தகவல் வருவதை அதிகாரிகள் பார்ப்பதே இல்லை. எங்கள் வார்டில் தண்ணீர் வரவில்லை. எப்போது வரும், இல்லையென்றால் போராட்டம் நடத்துவோம் என பொதுமக்கள் கூறுகிறார்கள். எனவே தண்ணீர் பிரச்சினையை கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.
மேயர் கூறும்போது, இந்த வருட கோடைக்காலத்தை போர் போட்டு தண்ணீர் பிரச்சினையை சமாளிப்போம். வருங்காலத்தில் ஜனவரி மாதமே சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து தண்ணீர் பிரச்சினை வராமல் நிவர்த்தி செய்து கொள்ளலாம், என்றார்.
குடிநீருக்குதான் சாலை மறியல்
காங்கிரஸ் கவுன்சிலர் பேசும்போது, மக்களின் அடிப்படை தேவை குடிநீர். குடிநீர் பிரச்சினைய தீர்த்து வைத்தாலே வார்டில் உள்ள 50 சதவீத பிரச்சினைகள் தீர்வாகும். மாநகராட்சி சார்பில் குடிநீருக்கு இதுவரை நாம் எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம். எவ்வளவு நிதி செயல்பாட்டில் இருக்கிறது. எவ்வளவு பணிகள் முடிந்துள்ளது என்பதை மாமன்ற கூட்டத்தில் வைக்க வேண்டும். சுற்றுச்சுவருக்கு நிதி ஒதுக்கீடு செய்வதை பிறகு செய்யலாம். தற்போது மக்களுக்கு தேவை குடிநீர். அந்த குடிநீர் பிரச்சினையை முதலில் முடிக்க வேண்டும். மக்கள் சாலை மறியலுக்கு வருவது குடிநீருக்குதான், என்றார்.
மேயர் பேசும்போது, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொதுநிதியில் ஒதுக்கீடு செய்து, பிப்ரவரி மாதம் செய்து முடித்துவிடலாம், என்றார்.
தி.மு.க. கவுன்சிலர்களுக்கிடையே வாக்குவாதம்
தி.மு.க. கவுன்சிலர்கள் பேசும்போது, மாநகராட்சியில் ஒருசில வார்டுகளில் 5 மணி நேரம் குடிநீர் வருகிறது என்றார்.
அதற்கு மற்றொரு தி.மு.க. கவுன்சிலர், 3 மணி நேரம் தான் தண்ணீர் வருகிறது. ஏற்கனவே தண்ணீர் பிரச்சினை இருக்கிறது என்று கூறுகிறோம். நீங்கள் எப்படி 5 மணி நேரம் தண்ணீர் வருகிறது என்று கூறலாம், என்றார். அப்போது தி.மு.க. கவுன்சிலர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மற்றொரு தி.மு.க. கவுன்சிலர் பேசும்போது, ஒரு பக்கம் 5 மணி நேரமும், ஒரு பக்கம் 3, 2 மணி நேரமும் தண்ணீர் செல்கிறது என கூறுகிறார்கள். அதற்கு என்ன காரணம். தொட்டி திறப்பாளர்கள் சரியான முறையில் தண்ணீர் திறந்து விடுவதில்லை, என்றார்.
மேயர் கூறும்போது, இதுபோன்று பல பிரச்சினைகள் உள்ளது. அவுட்சோர்சிங் விடபோகிறோம். பின்னர் அவர்கள்தான் பொறுப்பு. இதனால் சரியான முறையில் தண்ணீர் திறந்துவிடப்படும், என்றார்.
பின்னர் மாநகராட்சி அவரச கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டங்களில் மொத்தம் 58 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.