வணிகர் நலவாரிய உறுப்பினராக கரூர் வர்த்தக சங்க செயலாளர் நியமனம்
வணிகர் நலவாரிய உறுப்பினராக கரூர் வர்த்தக சங்க செயலாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக வணிகவரித்துறை தமிழ்நாடு வணிகர் நல வாரியம் சார்பில் வணிகர்களை ஊக்குவிக்கவும், இன்னல்கள் ஏற்படும் போது உதவி செய்யவும், நலனை காத்திடும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கவும் தமிழ்நாடு வணிகர் நல வாரியத்திற்கு ரூ.2 கோடியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அத்தகைய நல வாரியம் தமிழகத்தில் 1989-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.
இந்தநிலையில் புதுப்பிக்கப்பட்ட புதிய உறுப்பினர்களை கொண்ட தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தை அமைத்து அரசு ஆணையிட்டுள்ளது. அதில் தமிழக முதல்-அமைச்சர் தலைவராகவும், வணிகவரித்துறை அமைச்சர் துணைத்தலைவராகவும், வணிகவரித்துறை நிதித்துறை சார்ந்த அதிகாரிகள் 5 பேர் அலுவல் சார்ந்த உறுப்பினர்களாகவும், அலுவல் சாரா உறுப்பினர்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வர்த்தகர்கள் 30 பேர் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும். இவர்களில் அலுவல் சாரா உறுப்பினர்களில் ஒருவராக கரூர் மாவட்ட வர்த்தக சங்க செயலாளர் வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு கரூர் மாவட்டத்தை சேர்ந்த வர்த்தகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.