கருவேப்பிலங்குறிச்சி அரசு பள்ளியில் எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதிய மாணவன் மீது தாக்குதல் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு


கருவேப்பிலங்குறிச்சி அரசு பள்ளியில் எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதிய மாணவன் மீது தாக்குதல் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
x

கருவேப்பிலங்குறிச்சி அரசு பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதிய மாணவனை தாக்கியதை கண்டித்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

விருத்தாசலம்,

கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள சத்தியவாடி கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுவன். இவன் கருவேப்பிலங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வருகிறான். நேற்று அந்த மாணவன் பள்ளிக்கு சென்று எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதிவிட்டு, பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறைக்கு சென்றான்.

அப்போது அதே பள்ளியில் மற்றொரு பிரிவில் எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் கருவேப்பிலங்குறிச்சி ஜே.ஜே.நகர், பேரளையூர், நேமம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 மாணவர்கள் சேர்ந்து சத்தியவாடியை சேர்ந்த மாணவனை தாக்கியுள்ளனர். பின்னர் பள்ளியில் இருந்து சத்தியவாடிக்கு செல்வதற்காக அந்த மாணவன் கருவேப்பிலங்குறிச்சி பஸ் நிறுத்தத்திற்கு சென்ற போதும், அவர்கள் 3 பேரும் மீண்டும் ஆபாசமாக திட்டி தாக்கினர்.

தப்பி ஓடிய மாணவர்கள்

இதுகுறித்து அந்த மாணவன், சத்தியவாடியில் உள்ள தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தான். அதன் பேரில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கருவேப்பிலங்குறிச்சிக்கு திரண்டு வந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நேமம், பேரளையூர் பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர்.

இதில் ஆத்திரமடைந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தாக்குதல் நடத்திய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கருவேப்பிலங்குறிச்சி பஸ் நிறுத்தத்தில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன் பேரில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோவில் விழாவில் அட்டகாசம்

இதற்கிடையே போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கடந்த 6-ந் தேதி சத்தியவாடி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் விழாவில் திருநங்கை நாடகம் நடைபெற்றது. அப்போது கருவேப்பிலங்குறிச்சி, பேரளையூர், நேமம் உள்ளிட்ட கிராம பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவர்கள் நாடகம் பார்க்க சென்று, இரவில் அட்டகாசம் செய்துள்ளனர். இதனால் அக்கிராம இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த விரோதம் காரணமாக பள்ளியில் சத்தியவாடியை சேர்ந்த மாணவனை, சக மாணவர்கள் தாக்கியுள்ளது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீசார், 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story