கதித்தமலை வெற்றிவேலாயுதசாமி கோவில் மலைத்தேரோட்டம்
கதித்தமலை வெற்றிவேலாயுதசாமி கோவில் மலைத்தேரோட்டம்
ஊத்துக்குளி
ஊத்துக்குளி கதித்தமலை வெற்றி வேலாயுதசாமி கோவில் தைப்பூச திருவிழாவில் இன்று (புதன்கிழமை) திருவிழாவின் முக்கிய நிகழ்வான மலைத்தேரோட்டம் மற்றும் மகா தரிசனம் நடைபெறுகிறது.
கதித்தமலை
கொங்கு வளநாட்டின் குறும்பு நாடாகிய பதியினில் இயற்கை எழில்வளம் நிறைந்த ஊத்துக்குளியில் கதித்தமலை என்று அழைக்கப்படும் மலை மீது வெற்றி வேலாயுதசாமி எனும் திருப்பெயருடன் முருகப்பெருமான் எழுந்தருளியுள்ளார். ஊத்துக்குளி எனும் பெயர் பெறக் காரணமே கண்கண்ட தெய்வமாய் கதித்தாசலபதி முருகப்பெருமான் தன் சக்தி ஆயுதமான வேலினால் ஊன்றப்பட்டு எழுந்த தீர்த்தம் உடையது இத்திருத்தலமாகும். மூர்த்தியினாலும், ஸ்தலத்தினாலும் பெருமை வாய்ந்தது. தென்னகத்தில் மலைமீது திருவிழா கண்டு மர சிற்பத்திலான திருத்தேர் மலைக்கோவிலை சுற்றி வலம் வருவது இத்திருத்தலத்தின் தனிச்சிறப்பாகும். அருணகிரிநாதரின் தனிப்பாடல்களிலே கொண்டைச்செருக்கிலே எனத் தொடங்க பதியினில் மங்கை கதித்தமாமலை என பாடப்பட்டது.
முருகப்பெருமான் மலை மீது வீற்றிருந்து 336 திருப்படிகளாலும், விரைவில் தரிசனம் கிடைக்கப்பெறும் வகையில் தார் சாலையும் அமைந்து அமைதியும் சாந்தமும் ஏற்படுத்தக்கூடிய ஒரு சுற்றுச் சூழலிலே உள்ளது இக்கோவிலின் சிறப்பாகும்.
சாமி திருவீதி உலா
இங்கு தைப்பூச திருவிழா கடந்த மாதம் 28-ந் தேதி கதித்தமலையில் கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக காலை மற்றும் மாலை நேரத்தில் சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. 4-ந் தேதி காலை சுவாமி திருவீதி உலாவும், மாலை 4 மணிக்கு மேல் சாமி திருக்கல்யாண உற்சவம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
5-ந் தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்வான கீழ் தேரோட்டம் நடைபெற்றது. அதிகாலை 3 மணிக்கு மகா அபிஷேகமும், காலை 5 மணிக்கு மகா தீபாராதனை பின்னர் சுவாமி புறப்பாடு, காலை 6:30 மணிக்கு சுவாமி ரத ஆரோகணம் கீழ் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். நேற்று முன் தினம் பரிவேட்டை நடைபெற்றது. நேற்று இரவு கோவிலுக்கு முன்புறம் அமைந்துள்ள நவீன தெப்பத்தில் சுவாமி உலா காட்சி நடைபெற்றது.
மலைத்தேரோட்டம்
இன்று (புதன்கிழமை) காலை 7 மணிக்கு கதித்தமலை ஆண்டவருக்கு மகா அபிஷேகம், தீபாராதனையும், கதித்தமலை ஆண்டவர் சாமி ரத ஆரோகணம் மலைதேர் வடம் பிடித்தல் நடைபெறுகிறது. இரவு மகா தரிசனம், சுப்பிரமணியசாமி வள்ளி தெய்வானையுடன் புஷ்ப பல்லக்கில் சாமி திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறும். நாளை (வியாழக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழா உடன் தைப்பூச தேர் திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவடைகின்றது.