60 லட்சம் பேரை கொன்ற கொரோனா குறைந்ததா? முககவசம் அவசியமா?- கருத்து கூறும் ஈரோடு மக்கள்
60 லட்சம் பேரை கொன்ற கொரோனா குறைந்ததா? முககவசம் அவசியமா?- கருத்து கூறும் ஈரோடு மக்கள்
மருத்துவத்துறையில் அறிவியலின் வளர்ச்சியால் பல கொடூர நோய்கள் மனித குலத்தை விட்டு மறைந்து போயிருக்கின்றன. காலரா, பிளேக் உள்ளிட்ட உயிர்பலி வாங்கிய நோய்கள் வரலாற்று பதிவாக உள்ளன. அம்மை போன்ற நோய்கள் வருவதும், போவதும் சாதாரணம், பாதிப்பு எதுவும் இல்லை என்பது மருத்துவத்துறையின் சாதனை.
உலகை உலுக்கிய கொரோனா
எத்தனை மருத்துவ வளர்ச்சி வந்தாலும் குடிக்கும் தண்ணீர் மாறிப்போனால் வரும் ஜலதோசமும், மழையில் நனைந்தால் வரும் காய்ச்சலும் மனிதர்களின் உடன்பிறந்தவையாகவே இருக்கிறது. ஜலதோஷம் வந்தால் 7 நாட்கள், காய்ச்சல் வந்தால் 3 நாட்கள். அதற்கு எந்த மருந்தும் தேவையில்லை என்றும், உடல் தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும் ஒரு நிலைதான் இவை என்று இயற்கை மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இப்படி சாதாரண ஜலதோஷம்போன்று உடலில் நுழைந்து, பெரும் சளியாக நுரையீரலில் தேங்கி, காய்ச்சலாக, உடல் வலியாக பெரும் பாடு படுத்தி, சுவாசப்பையை அடைத்து உயிரை எடுத்து உலகையே உலுக்கிய நோய் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து இருக்கிறது கொரோனா.
188 நாடுகளில்...
கொரோனா பெருந்தொற்று 188 நாடுகளில் பரவி இருக்கிறது. 60 கோடிக்கும் அதிகமானவர்கள் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டதில், சுமார் 60 லட்சம் பேர் உயிரிழந்து போயினர். தற்போது 1½ கோடிக்கும் அதிகமானவர்கள் சிகிச்சையில் உள்ளனர்.
இப்படி மிகப்பெரிய பேரிழப்பை உருவாக்கிய கொரோனா வைரஸ் இந்தியாவில் கண்டறியப்பட்டதை தொடர்ந்து 2021 மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் நீடித்தது. இந்தியாவை பொறுத்தவரை இதுவரை சுமார் 4½ கோடி பேர் பாதிக்கப்பட்டனர். 5¼ லட்சம் பேர் உயிரிழந்தனர். தற்போது சுமார் 3 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சகஜநிலை
தமிழ்நாட்டில் முதல் கொரோனா தொற்று 2020 மார்ச் 7-ந் தேதி உறுதிப்படுத்தப்பட்டது. சுமார் 35 லட்சத்து 90 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். 38 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இப்போது தினசரி 200-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகிறார்கள். உயிரிழப்பு மிகவும் குறைந்து விட்டது. முதல் அலை, 2-ம் அலை, 3-ம் அலை என்று சுனாமியைவிட பெரும் அலைகளை ஏற்படுத்தி உலக மக்கள் தொகையை குறைத்த கொரோனா உலக வரலாற்றில் மனித அழிவின் காரணியாக சிறப்பு பதிவினை பெற்றது.
2 ஆண்டுகள் உலகமே ஸ்தம்பித்ததால் பொருளாதாரம் மிகவும் பின்தங்கியது. முகக்கவசம், தடுப்பூசியின் பாதுகாப்பு என்று கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக பொதுமக்கள் சகஜநிலைக்கு திரும்பி உள்ளனர். தலா 2 முகக்கவசங்கள் கூட அணிந்து பலரும் வெளியே வந்தனர். ஆளுக்கொரு கிருமிநாசினி புட்டி வைத்துக்கொண்டனர். கைகள் கழுவினால்தான் கடைகளுக்குள் கூட அனுமதிக்கப்பட்டனர். சிலருக்கு முகக்கவசம் அணிவதும், கிருமி நாசினி தெளிப்பதும் தன்னிச்சையாக நடக்கும் அளவுக்கு பழக்கமாகிப்போனது. முகக்கவசம் அணியாத நபர்களை பார்த்தாலே பலர் எரிச்சலுடன் கத்தும் நிலையும், தெரிந்த நபர்களுடன்கூட சந்தேகத்துடன் பேசும் நிலையும் இருந்தது.
முககவசம்
தற்போது வீதியில் இறங்கி சென்றால் முக கவசம் அணிந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது. முக கவசம் அணிந்தவர்களை பார்த்தால்தான் சந்தேகத்துடன் பார்க்கும் நிலைக்கு மனநிலை மாறி உள்ளது. எண்-95, 3 அடுக்கு முககவசம் என்று தேடித்தேடி வாங்கிய பலரும், இப்போது கடமைக்காக துணிகளால் ஆன முககவசங்களை வாங்கி வைத்துக்கொள்கிறார்கள். ஆடையின் நிறத்துக்கு ஏற்ப முககவசம் வைத்துக்கொள்வதே தற்போதைய பேஷனாக இருக்கிறது.
இந்த சூழலில் கொரோனாவின் தாக்கம் குறைந்து விட்டதா? இனிமேலும் முககவசங்கள் தேவையா? என்ற கேள்வி எழுந்து உள்ளது.
முறையான அறிவிப்பு
ஈரோடு திண்டல் பி.வி.பி பள்ளி தாளாளர் குருசடி சேவியர் கூறியதாவது:-
எங்கள் பள்ளிக்கூடத்தில் அனைத்து குழந்தைகளும், மாணவ-மாணவிகளும் முககவசம் அணிந்தே வருகிறார்கள். ஒரு முககவசம் 4 மணி நேரம் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்கிறார்கள். ஆனால் பள்ளி மாணவ-மாணவிகள் அணிந்து வரும் ஒரே முக கவசத்தை நாள் முழுவதும் அணிகிறார்கள். அவர்களின் வாயில் இருந்து வரும் எச்சிலால் அடைப்புகள் ஏற்பட்டு மூச்சு விடவே சிரமப்படுகிறார்கள். சிலருக்கு இது அலர்ஜியையும் ஏற்படுத்துகிறது. எனவே முககவசம் இனிமேலும் தேவையா? என்று பெற்றோர்கள் கேட்கிறார்கள். இதுபற்றி சுகாதாரத்துறை உரிய ஆய்வு செய்து முறையான அறிவிப்பு வெளியிட வேண்டும்.
இவ்வாறு முதல்வர் குருசடி சேவியர் கூறினார்.
நல்லெண்ணம்
முன்னாள் அரசு வக்கீல் ஜி.டி.ஆர்.சுமதி கூறியதாவது:-
கிராமப்புறங்களில் முக கவசம் அணிபவர்களை பார்க்க முடிவதில்லை. ஆனால், நகர்பகுதிகளுக்கு வரும்போது எச்சரிக்கை உணர்வுடன் முக கவசம் அணிந்து வருகிறோம். காய்ச்சல், சளி இருப்பவர்கள் அவர்களாகவே முககவசம் அணிந்து கொண்டால், மற்றவர்களுக்கு பரவும் அபாயம் இருக்காது. அதுபோல் வெளியில் செல்பவர்கள் தேவைப்படும் இடத்தில் கண்டிப்பாக முக கவசத்தை பயன்படுத்த வேண்டும். நம்மால் யாருக்கும் பிரச்சினை வந்து விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் செயல்பட்டால் போதும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழிப்புணர்வு
குடும்பத்தலைவி ஜெயவடிவு கூறியதாவது:-
தொடர்ந்து முகக்கவசம் அணிவதால் சுவாச பிரச்சினைகள் வருகிறது. மூச்சு இழுக்க கஷ்டமாக இருக்கிறது. காய்ச்சல், சளி இருப்பவர்கள் மட்டும் முககவசம் அணிந்து கொண்டால் மற்றவர்களுக்கு பரவாமல் இருக்கும். பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்து, தங்களுக்கு உடல் நிலை பிரச்சினை என்றால் தாங்களாகவே தனிமைப்படுத்தியும், முக கவசம் அணிந்தும் பிறருக்கு பிரச்சினை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். முக கவசம் அனைவருக்கும் தேவை இல்லை என்பதே எனது கருத்து.
இவ்வாறு அவர் கூறினார்.
விற்பனை குறைவு
கொல்லம்பாளையத்தில் சாலையோர கடை வைத்திருக்கும் கண்ணன் கூறியதாவது:-
5 ஆண்டுகளுக்கும் மேலாக சாலையோர கடை வைத்திருக்கிறேன். பருவகாலத்துக்கு ஏற்ப பொருட்கள் விற்பனை செய்வேன். கொரோனாவின் போது முழுமையாக முககவசம் மட்டுமே விற்பனை செய்தேன். அனைத்து வகை முகக்கவசங்களும் என்னிடம் உள்ளன. கொரோனா தளர்வுகள் தொடங்கியபோது ஏராளமானவர்கள் வந்து வாங்குவார்கள். இப்போது புழுதிக்காக மட்டுமே வாங்குகிறார்கள். முக கவசம் அணிபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விட்டது. இப்போது முக கவசத்துடன் குளிர்கால விற்பனையாக கம்பளி விற்பனையை தொடங்கி விட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவசியம்
தடுப்பூசி, முக கவசம், கைகழுவும் முறைகளால் மட்டுமே இன்று நாம் கொரோனாவை விட்டு விலகி இருக்கிறோம். சுகாதாரத்துறையும், மருத்துவர்களும் மீண்டும் மீண்டும் எச்சரிக்கை விடுத்துக்கொண்டேதான் இருக்கிறார்கள். கொரோனா வைரசுக்கு உருமாறும் தன்மை இருப்பதால் அது எப்போது வேண்டுமானாலும் தனது வீரியத்தை காட்டக்கூடும். எனவே எச்சரிக்கையுடன், அத்தியாவசியமான இடங்களில் முககவசத்தை அணிவதையும், நோய் பாதிப்பு இருப்பவர்கள் கண்டிப்பாக முககவசம் அணிவதை தனிமனித ஒழுக்கமாகவும் கடைபிடிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.