மருந்துகள் விலை உயர்வு, பயணச் சலுகைகள் பறிப்பு: மூத்த குடிமக்களின் தேவை என்ன? எதிர்பார்ப்பு என்ன?- மருத்துவர், சமூக ஆர்வலர் கருத்து
மருந்துகள் விலை உயர்வு, பயணச் சலுகைகள் பறிப்பு: மூத்த குடிமக்களின் தேவை என்ன? எதிர்பார்ப்பு என்ன?- மருத்துவர், சமூக ஆர்வலர் கருத்து
அனைவருக்கும் தேவைப்படும் அத்தியாவசியமான பொருளாக இன்று மருந்துகள் மாறிவிட்டன. ஒவ்வொரு குடும்பத்திலும் உணவுப்பொருட்களுக்காக ஒதுக்கும் பட்ஜெட்டில் மருந்தும் மறக்காமல் இடம்பிடித்து கொள்கிறது. இந்தநிலையில், அத்தியாவசிய மருந்து பொருட்களின் விலைகள் மருந்து பொருட்களின் விலை கடந்த 1-ந்தேதி முதல் 12 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
இதனால் பெரிதும் பாதிப்புக்கு ஆளாவோர்கள் மூத்த குடிமக்கள் தான். காரணம் நிறையப் பேர் வருமானம் இல்லாமலும், போதுமான சேமிப்புகள் இல்லாமலும், ஓய்வூதியம் பெற்று வாழ்க்கையை ஓட்டி வருபவர்களாகவும்தான் இருக்கின்றனர். வயதானாலே கூடவே இணை நோய்களும் வந்து விடுகின்றன.
அதுமட்டுமா? கொரோனா பரவிய காலத்தில் முதியவர்களுக்கு குறிப்பாக ஆண் பயணிகளுக்கு 40 சதவீதமும், பெண் பயணிகளுக்கு 50 சதவீதமும் வழங்கப்பட்டு வந்த ரெயில் கட்டண சலுகையும் பறிக்கப்பட்டுவிட்டது. அதேபோல் கடன் பத்திரங்கள் மூலம் முதியவர்கள் செய்யும் சேமிப்புகளுக்கு 10 சதவீத வருமான வரி விலக்கு சலுகையும் கடந்த 1-ந்தேதி முதல் நிறுத்தப்பட்டு விட்டது. வங்கிகளில் இன்சூரன்ஸ் திட்டங்கள் ரத்து, வருங்கால வைப்பு நிதி மூலம் அளிக்கப்படும் ஓய்வூதியம் குறைப்பு இப்படி ஒவ்வொன்றும் தங்களுக்கு பாதகமாக நடப்பதாகவே அவர்கள் கருதுகிறார்கள்.
இதுபற்றி பல்வேறு தரப்பினர் வெளியிட்டு இருக்கும் கருத்துகள் வருமாறு:-
முதியோர்களுக்கு ஆறுதல்
அண்ணாநகரைச் சேர்ந்த 82 வயதான மூத்த முதியோர் நல மருத்துவர் டாக்டர் வி.எஸ்.நடராஜன்:-
வயது ஆக, ஆக நோய்களும் அதிகரித்து வருகின்றன. முன்பெல்லாம் நோய்கள் வந்தால் 10 நாட்களுக்கு மருந்து சாப்பிட்டால் போதும், ஆனால் தற்போது வரும் நோய்களுக்கு ஆண்டு கணக்கிலோ அல்லது வாழ்நாள் முழுவதுமோ மருந்து சாப்பிட வேண்டிய நிலை உள்ளதால் மருத்துவ செலவும் அதிகரிக்கிறது. எனவே முதியவர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அரசு அளிக்கும் ஓய்வூதியத்தை வைத்துதான் வாழ்க்கையை ஓட்டுகின்றனர். முதியோர்களுக்கு விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஓய்வூதியத்தையும், வங்கிகளில் வட்டி விகிதத்தையும் அதிகரிக்க வேண்டும். நகர்ப்புறங்களில் மட்டும் ஆங்காங்கே காணப்படும் மத்திய அரசின் மக்கள் மருந்தகங்களை கிராமப்புறங்களிலும் அதிக எண்ணிக்கையில் திறக்க வேண்டும். முதியோர் நலன் பிரிவை அனைத்து மாவட்ட தலைநகர் மருத்துவமனை, தாலுகா மருத்துவமனைகளிலும் தொடங்க வேண்டும். நாள்பட்ட நோய்களுக்கான மருந்துகளை ரேஷன் கடைகளிலேயே முதியவர்களுக்கு இலவசமாக வழங்கலாம். 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் அரசே காப்பீடு செய்து கொள்ள வேண்டும். அனைத்து மருத்துவமனைகளிலும் முதியவர்களுக்கு நிமோனியா ஊசியை இலவசமாக போட வேண்டும். இதுவே முதியோர்களின் தேவையும், எதிர்பார்ப்புமாக இருப்பதுடன், முதியவர்களுக்கு ஆறுதல் அளிப்பதாக இருக்கும்.
அரசு மீது நம்பிக்கை
பழம்பெரும் நடிகை ஜெயகுமாரி:-
லட்சக்கணக்கான குடும்பத்தினர் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை செலவுகளை எதிர்கொள்ள முடியாமல் திணறி வரும் இந்த நிலையில் மருந்து பொருட்களின் விலை உயர்வு மேலும் அனைவரையும் பாதிக்கும். முதியோர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் நலன் கருதி செயல்பட்டு வரும் நம்முடைய மாநில அரசு இந்த விலையை கட்டுப்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது. ஒரு சில இடங்களில் பெற்றோர்களை வீடுகளில் கவுரவமாக வைத்து பிள்ளைகள் பார்ப்பதில்லை. இதனால் மருந்து மாத்திரைகளை நம்பியே முதியவர்கள் வாழ்கின்றனர். அவர்களுக்கு நலன் புரியும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
உரிய சலுகை தேவை
ஈரோடு மோளகவுண்டன்பாளையம் கல்யாணசுந்தரம் வீதியை சேர்ந்த முதியவர் சூர்யகோபால்:-
எனக்கு 74 வயது ஆகிறது. நான் கைத்தறி நெசவாளராக பணியாற்றினேன். எனது கை திடீரென செயலிழந்தது. இதனால் கடந்த 3 ஆண்டுகளாக வேலை செய்யாமல் இருக்கிறேன். மேலும், கை குணமடைய வேண்டுமென்று சுமார் ரூ.30 ஆயிரம் மருத்துவ செலவு செய்தும் குணமடையவில்லை. தினமும் மாத்திரை சாப்பிட்டு வருகிறேன். அதுவும் மக்கள் மருந்தகத்தில் கிடைப்பதால் குறைந்த விலைக்கு வாங்க முடிகிறது.
முதியோர் உதவித்தொகை ரூ.1,000 பெற்று வந்தேன். ஆனால் கடந்த 6 மாதங்களாக அந்த உதவித்தொகையும் வராததால் மிகவும் சிரமமாக உள்ளது. என்னை போன்ற முதியவர்கள் பலர் வருமானம் இல்லாத சூழ்நிலையில் மருத்துவ செலவுக்கே குறிப்பிட்ட தொகை செலவிடப்படுகிறது. முதியோர் உதவித்தொகையை முறையாக கொடுத்தாலே மிகவும் உதவியாக இருக்கும். மேலும், விலைவாசி உயர்ந்துவரும் நிலையில், முதியவர்களுக்கு உரிய சலுகை வழங்க அரசு முன்வரவேண்டும்.
நிதி நெருக்கடி
அம்மாபேட்டையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியையான 71 வயதுடைய வாலாம்பாள்:-
இன்றைய காலகட்டத்தில் மருந்துகள் என்பது உணவை போல் அத்தியாவசிய தேவையாகவே உள்ளது. மனிதர்கள் மருந்தில்லாமல் வாழ முடியாது என்கிற சூழ்நிலையில் 12 சதவீதம் வரை மருந்துகளின் விலை உயர்வு என்பது பெரும்பாலான மூத்த குடிமக்களை பாதிக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. மனிதர்களின் ஆயுட்காலம் ஏற்கனவே உணவு பழக்க வழக்கங்களால் குறைந்து கொண்டே வரும் நிலையில் இருக்கிற காலங்களில் மருந்து மாத்திரையின் மூலம் தான் மனிதன் உயிர் வாழ முடிகிறது. அதுவும் 50 வயதுக்கு மேல் மாத்திரைகள் கட்டாயமாகவே இருக்கிறது. ஓய்வு பெற்ற ஆசிரியையான எனக்கு வரும் ஓய்வூதியத்தை வைத்து சமாளிக்க முடியாத சூழ்நிலையில் கூலி வேலைக்கு செல்லும் மூத்த குடிமக்கள் கண்டிப்பாக இந்த வரி உயர்வை சமாளிப்பது மிகவும் கஷ்டமான ஒன்றாகும். அதேபோல் ஆண், பெண்களுக்கு ரெயில் கட்டண சலுகை ரத்து பெரிய பாதிப்பு இல்லை என்றாலும் மூத்த குடிமக்களின் வருமானத்துக்கு ஏற்ற பட்ஜெட்டில் துண்டு விழும்போது பாதிப்புக்குள்ளாகின்றனர். மேலும் கடன் பத்திரங்கள் மூலம் முதியவர்கள் செய்யும் சேமிப்புகளுக்கு 10 சதவீத வருமான வரி விலக்கு சலுகை நிறுத்தப்படுவதும், வங்கிகளில் இன்சூரன்ஸ் திட்டங்களை ரத்து செய்வதும், வருங்கால வைப்பு நிதி மூலம் அளிக்கப்படும் ஓய்வூதியம் குறைக்கப்படுவதும் ஏழை, எளிய, நடுத்தர, பாமர மக்கள் மற்றும் ஓய்வூதியர்கள் போன்ற மூத்த குடிமக்களை மிகப்பெரும் பொருளாதார நிதி நெருக்கடி சவாலுக்கு ஆளாக்கும்.
கடும் பாதிப்பு
தாளவாடியை சேர்ந்த பழனியம்மாள்:-
மாத்திரைகள் விலை உயர்வால் முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். குறிப்பாக மாதந்தோறும் 1,000 ரூபாய்க்கு மாத்திரைகள் வாங்குகிறோம் என்றால் இனி 1,500 ரூபாய் செலவு செய்ய வேண்டியது வரும். எங்களைப் போன்ற ஏழை முதியவர்களுக்கு இது பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. எனவே மாத்திரைகளின் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.