குமாரகோவில் முருகன் கோவிலுக்கு இன்று காவடி ஊர்வலம்


குமாரகோவில் முருகன் கோவிலுக்கு இன்று காவடி ஊர்வலம்
x
தினத்தந்தி 9 Dec 2022 12:15 AM IST (Updated: 9 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

தக்கலையில் குமாரகோவில் முருகன் கோவிலுக்கு இன்று காவடி ஊர்வலம் நடக்கிறது. இதற்கு வரவேற்பு அளிக்க விவசாயிகள் சாலையோரம் வாழைக்குலை தோரணம் கட்டி அலங்கரித்து உள்ளனர்.

கன்னியாகுமரி

தக்கலை,

தக்கலையில் குமாரகோவில் முருகன் கோவிலுக்கு இன்று காவடி ஊர்வலம் நடக்கிறது. இதற்கு வரவேற்பு அளிக்க விவசாயிகள் சாலையோரம் வாழைக்குலை தோரணம் கட்டி அலங்கரித்து உள்ளனர்.

காவடி ஊர்வலம்

தக்கலை அருகில் உள்ள குமாரகோவிலில் பிரசித்திபெற்ற வேளிமலை முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை பக்தர்கள் தங்களது நேர்த்தி கடன் நிறைவேற்ற விரதம் இருந்து காவடி எடுத்து செல்வது வழக்கம்.

இதுபோல் திருவிதாங்கூர் மன்னர்கள் ஆட்சி காலத்தில் இருந்தே நாட்டில் மும்மாரி பெய்து, விவசாயம் செழித்து, மக்கள் பசி பட்டினி இன்றி வாழவும், சண்டை சச்சரவு இன்றி நிம்மதியுடன் வாழவும் தக்கலை பொதுப்பணித்துறை, போலீஸ் நிலையம் சார்பில் வேளிமலை முருகனுக்கு அதிகாரிகள் காவடி எடுத்து செல்வார்கள். இந்த பாரம்பரிய மரபு தொன்றுதொட்டு இன்று வரை அரசு சார்பில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு காவடி ஊர்வலம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பறக்கும் காவடி, வேல்காவடி, புஷ்பகாவடி, பால், பன்னீர், சந்தனம் போன்ற விதவிதமான காவடிகளை எடுத்து செல்கின்றனர்.

வாழைக்குலை தோரணம்

பக்தர்கள் ஒவ்வொரு ஊரில் இருந்தும் காவடி எடுத்து கால்நடையாகவும், வாகனங்களில் தொங்கியவாறும் ஊர்வலமாக வேளிமலை முருகன்கோவிலுக்கு செல்வார்கள். கோவிலில் இன்று பிற்பகல் 3 மணியில் இருந்து முருகபெருமானுக்கு பக்தர்கள் காவடியில் கொண்டு செல்லும் அபிஷேக பொருட்கள் மூலம் அபிஷேகம் நடைபெறும்.

இந்த விழாவையொட்டி பக்தர்களை வரவேற்கும் விதமாக தென்கரைதோப்பு ஊர் விவசாயிகள் பொதுமக்கள் சார்பில் புலியூர்குறிச்சியில் சாலையின் இருபுறங்களிலும் வரிசையாக வாழை குலை தோரணம் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோல் தக்கலை போலீஸ் நிலையம், பொதுப்பணித்துறை அலுவலகம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.


Next Story