ரூ.63 கோடியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம்
ரூ.63 கோடியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம்
திருப்பூர்
குண்டடத்தில் ரூ.63 கோடியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார்.
காவிரி கூட்டுகுடிநீர் திட்டம்
குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் கொடுவாயில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். கலெக்டர் வினீத் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-
காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் கொடுமுடியை நீராதாரமாக கொண்டு முத்தூர், காங்கயம் வழியாக மேட்டுக்கடை வரையில் கொண்டு வர முடிகிறது. வெள்ளகோவில், மூலனூர், கொளத்துப்பாளையம், தாராபுரம் நகராட்சி மற்றும் சின்னக்காம்பாளையம் பேரூராட்சி வரையிலும் பெரிய திட்டமாக முன்னாள்-முதல் அமைச்சர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்டது. இதுவரை கடந்த காலத்தில் சரியாக பராமரிப்பு பணி நடைபெறாத காரணத்தால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதை நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற இலக்கோடு பணியாற்றிக்கொண்டிருக்கிறோம். ஆங்காங்கு ஆழ்குழாய் கிணறு மூலமாக தண்ணீர் எடுப்பதற்கும், மின்மோட்டார் மற்றும் குழாய்களை மாற்றி குடிநீர் சீராக வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்களின் மனுக்கள்
ஊரக பகுதிகளில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவது, தேவையான வேலை வாய்ப்புகள் அளிப்பது, வறுமை ஒழிப்பு மற்றும் கிராமப்புற மக்களுக்கு தரமான சேவைகளை வழங்குதல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு ஊரக வளர்ச்சித்திட்டங்கள் அமைக்கின்றன. இந்த அரசின் தொடர் முயற்சிகள், வறுமையை ஒழித்து தரமான வாழ்விற்கு தேவையான அடிப்படைகளை நிர்ணயம் செய்யும். குக்கிராம அளவில் அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி, சுகாதாரத்தை மேம்படுத்தி, இயற்கை வளங்களை காத்து, கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் உள்ள இடைவெளியை குறைத்து, வறுமையை அகற்ற ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டத்துக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்தும் முழு கவனம் செலுத்தி உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்தந்த பகுதிகளில் உள்ள பொதுமக்களை சந்தித்து குறைகளை மனுக்களாக பெற்று உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். பொதுமக்களின் மனுக்கள் மீது அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் தாராபுரம் ஆர்.டி.ஓ. குமரேசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லட்சுமணன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) மதுமதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வாணி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
ரூ.63 கோடியில் குடிநீர் திட்டம்
முன்னதாக அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-
குண்டடம் பகுதிக்கு காவிரி குடிநீர் திட்டம் கடந்த 1997-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப குடிநீர் திட்டம் புதுப்பிக்கப்படவில்லை. குடிநீர் பிரச்சினையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்றதில் புதிய காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு ரூ.63 கோடி நிதி வழங்கி உத்தரவிட்டுள்ளார். தொழில்நுட்ப அங்கீகாரம் கிடைத்ததும் கடைக்கோடி கிராமம் வரை குடிநீர் தடையின்றி கிடைக்கும் வகையில் திட்டம் புதுப்பிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.