ஜல்ஜீவன் திட்ட முறைகேடு புகார் குறித்து கலெக்டர் நேரில் ஆய்வு செய்ய கெடு - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


ஜல்ஜீவன் திட்ட முறைகேடு புகார் குறித்து   கலெக்டர் நேரில் ஆய்வு செய்ய கெடு - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

ஜல்ஜீவன் திட்ட முறைகேடு புகார் குறித்து கலெக்டர் நேரில் ஆய்வு செய்ய கெடு விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை


ஜல்ஜீவன் திட்ட முறைகேடு புகார் குறித்து கலெக்டர் நேரில் ஆய்வு செய்ய கெடு விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

முறைகேடு

மதுரையை சேர்ந்த முத்துராஜ் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கீரனூர் கிராமத்தில் மத்திய அரசு அறிவித்துள்ள ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு வீட்டிற்கும் இரும்பு குழாய்கள் மூலம் தூய்மையான குடிநீர் கிடைக்க எங்கள் கிராமத்திற்கு ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஆனால் கீரனூர் கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் பஞ்சாயத்து செயலாளர் ஆகியோர் ஜல்ஜீவன் திட்டத்தில் குழாய் அமைப்பதற்கான விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல் வெறும் 200 குழாய்கள் மட்டுமே அமைத்து ரூ.4 லட்சம் மட்டுமே செலவிட்டுள்ளனர். இதற்காக போலியான ஆவணங்கள் தயாரித்து அரசின் நிதியை மோசடி செய்துள்ளனர்.

இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே கீரனூர் கிராமத்தில் ஜல்ஜீவன் திட்டத்தில் குழாய் அமைப்பதில் நடைபெற்ற முறைகேடு குறித்து மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு முறைகேடு செய்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

கலெக்டர் ஆய்வு செய்ய கெடு

இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது, விசாரணை முடிவில், மதுரை மாவட்ட கலெக்டர் 3 மாதத்திற்குள் கீரனூர் பகுதியில் ஜல்ஜீவன் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதா? என ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வில் முறைகேடு ஏதேனும் நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.


Related Tags :
Next Story