கூண்டு வைத்து புலியை பிடிக்க வேண்டும்


கூண்டு வைத்து புலியை பிடிக்க வேண்டும்
x
தினத்தந்தி 16 Dec 2022 12:30 AM IST (Updated: 16 Dec 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

முதுமலை ஊராட்சியில் ஆட்டை புலி கடித்து கொன்றது. இதனால் கூண்டு வைத்து புலியை பிடிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

நீலகிரி

கூடலூர்,

முதுமலை ஊராட்சியில் ஆட்டை புலி கடித்து கொன்றது. இதனால் கூண்டு வைத்து புலியை பிடிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஆட்டை கடித்து கொன்றது

கூடலூர் தாலுகா முதுமலை ஊராட்சி, புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ளது. இங்கு முதுகுளி, நாகம்பள்ளி, மண்டக்கரா, புலியாளம், கல்லஞ்சேரி உள்பட பல கிராமங்களில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். கால்நடைகளை வளர்ப்பது, விவசாயம் மற்றும் கூலி வேலை உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் கல்லஞ்சேரி கிராமத்தை சேர்ந்த விவசாயி ராமச்சந்திரன் தனது வீட்டில் கால்நடைகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள நிலத்தில் மேய்ச்சலுக்கு அனுப்பினார்.

பின்னர் மாலையில் கால்நடைகளின் அலறல் சத்தம் கேட்டது. அப்போது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகள் ஓடிச்சென்று பார்த்தனர். அப்போது புலி ஒன்று ஆட்டை கடித்து கொன்றது தெரியவந்தது.

புலியை பிடிக்க வேண்டும்

மேலும் பொதுமக்கள் வருவதை கண்ட புலி, அங்கிருந்து ஓடியது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். புலி நடமாட்டத்தை கண்காணிக்க சில இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினர். தொடர்ந்து புலி நடமாட்டம் குறித்து வனத்துறையினர் ஆய்வு நடத்தினர். விவசாயிக்கு இழப்பீடு தொகை வழங்கப்படும் என உறுதி அளித்தனர்.

தொடர்ந்து கிராம மக்கள் வனத்துறையினரிடம் கூறும்போது, ஆட்டை கடித்த புலி மிகவும் மெலிந்து காணப்பட்டது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தெப்பக்காடு பகுதியில் பதுங்கி இருந்து வேட்டை தடுப்பு காவலரை புலி தாக்கியது. தற்போது அப்பகுதியில் வன ஊழியர்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். இதனால் அருகே உள்ள கல்லஞ்சேரி கிராமத்துக்கு புலி இடம் பெயர்ந்து இருக்கலாம். மான் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாட முடியாமல் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூண்டு வைத்து புலியை பிடிக்க வேண்டும் என்றனர்.


Next Story