கணவருடன் சேர்த்து வைக்கக்கோரிகுறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு மண்எண்ணெய் கேனுடன் வந்த பெண்


கணவருடன் சேர்த்து வைக்கக்கோரிகுறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு மண்எண்ணெய் கேனுடன் வந்த பெண்
x

கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு பெண் மண்எண்ணெய் கேனுடன் வந்தாா்.

திண்டுக்கல்

கணவரை சேர்த்து வைக்கக்கோரி, ஈரோட்டில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்குக்கு மண்எண்ணெய் கேனுடன் வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

மண்எண்ணெய் கேனுடன்...

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டம் நடக்கும் அரங்குக்குள் ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தை சேர்ந்த சாந்தி (வயது 36) என்பவர் மனு கொடுப்பதற்காக வரிசையில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அவர் வைத்திருந்த பையில் இருந்து மண்எண்ணெய் வாசனை வீசியது. உடனே அருகில் நின்று கொண்டு இருந்தவர்கள் இதுகுறித்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் தெரிவித்தனர்.

உடனே போலீசார் விரைந்து சென்று, சாந்தி கையில் வைத்திருந்த பையை சோதனை செய்து பார்த்தனர். அப்போது அவரது பையில் இருந்த கேனில் 5 லிட்டர் மண்எண்ணெய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதைத்தொடர்ந்து போலீசார், சாந்தியை கூட்ட அரங்குக்கு வெளியே அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

வேறு பெண்ணுடன் பழக்கம்

அப்போது சாந்தி போலீசாரிடம் கூறியதாவது:-

எனது கணவர் பெயர் சுகந்தன். கடந்த 14 வருடங்களுக்கு முன்பு நாங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு குழந்தை இல்லை. எனது கணவர் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள பல்ல கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு பார்சல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக எனது கணவரின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது. இதுபற்றி விசாரித்தபோது, அவர் வேலை செய்யும் நிறுவனத்தில் ஒரு பெண்ணுடன் அவருக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நான் எனது கணவரை கண்டித்தேன். ஆனால் அந்த பெண்ணுடன் பழகுவதை எனது கணவர் நிறுத்தவில்லை. மேலும் எனது கணவர் வீட்டுக்கு வருவதையும் நிறுத்திவிட்டார்.

சேர்த்து வைக்க வேண்டும்

செல்போனில் தொடர்பு கொண்டாலும் போனை எடுப்பதில்லை. இதற்கிடையில் எனது கணவரின் தாய், தந்தை அந்த பெண் வீட்டுக்கு சென்று பெண் கேட்டுள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த நான் இதுபற்றி போலீஸ் நிலையம் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால் தற்கொலை செய்யும் நோக்கத்துடன் கலெக்டர் அலுவலகத்துக்கு மண்எண்ணெய் கேனுடன் வந்தேன். எனது கணவரை அந்த பெண்ணிடம் இருந்து மீட்டு என்னுடன் சேர்ந்து வாழ வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதைத்தொடர்ந்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் அந்த பெண்ணை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story