நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து தி.மு.க. நாடகம் ஆடுகிறது-மத்திய மந்திரி எல்.முருகன் குற்றச்சாட்டு
கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் பட்டியலின, பழங்குடியின மக்கள் பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள் என்று எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை,
மத்திய இணை மந்திரி எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னையில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங். சிலை திறப்பு விழாவில் பேசிய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 'கல்லூரி, நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு துறை நியமனங்களில் பிற்படுத்தப்பட்டவர்கள் போராட வேண்டிய நிலை இருக்கிறது. சாதி வாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும்' என்று பேசியுள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் பட்டியலின, பழங்குடியின மக்கள் பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள். இதில் தொடர்புடைய குற்றவாளிகளை இன்று வரை கண்டுபிடிக்காமல் பாதிக்கப்பட்ட மக்களை பரிசோதனை என்ற பெயரில் வழக்கில் சிக்க வைக்கவும் இந்த அரசு முயற்சிக்கிறது. இந்த சம்பவங்களில் தி.மு.க.வினர் பின்னணி இருப்பதால் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார். எந்த நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து தி.மு.க. தலைமை நாடகமாடுகிறதோ? அதே நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் அவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.