கிராமப்புறங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது கட்டாயமாக்கப்பட வேண்டும்
கிராமப்புறங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதை கட்டாயமாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குற்ற சம்பவங்கள்
3-வது கண் எனப்படும் கண்காணிப்பு கேமராக்களின் அவசியம் அத்தியாவசியமாகி வருகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
இன்றைய நிலையில் பெரும்பாலான குற்ற வழக்குகளில் குற்றவாளிகளைப் பிடிப்பதற்கு கண்காணிப்பு கேமராக்கள் பேருதவியாக இருந்து வருகின்றன. அத்துடன் இங்கு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது என்ற வாசகமே குற்றவாளிகளுக்கு அச்சத்தை உண்டாக்கி பல நேரங்களில் குற்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் நிலை உள்ளது. இந்த நிலையில் பல வணிக நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் திருட்டு நடப்பதை தடுக்கும் விதமாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியுள்ளனர். ஆனாலும் வீதிகளை கண்காணிக்கும் விதமான கேமராக்களை பொருத்துவதில் தயக்கம் காட்டுகின்றனர். இதற்கு அந்த வீதியில் ஏதேனும் குற்ற சம்பவங்கள் நடந்தால் போலீஸ், சாட்சி என அலைய வேண்டிய நிலை இருக்கும் என்ற அச்சம் ஒரு காரணமாக உள்ளது.
விழிப்புணர்வு
நகரப்பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதன் அவசியம் குறித்து போலீசார் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். மேலும் சமூக ஆர்வலர்கள், குடியிருப்போர் நல சங்கங்கள் மூலம் ஒரு சில குடியிருப்பு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் கிராமப்பகுதிகளில் இதுகுறித்த விழிப்புணர்வு இல்லை. இதனால் குற்ற சம்பவங்கள் நடக்கும் போது துப்பு துலக்குவதில் போலீசாருக்கு கடுமையான சிரமங்கள் ஏற்படுகிறது. இந்தநிலையில் மடத்துக்குளம் ஒன்றியம் மெட்ராத்தி ஊராட்சியில் மெட்ராத்தி, ராமேகவுண்டன்புதூர் உள்ளிட்ட கிராங்களில் நுழைவுபகுதி மற்றும் முக்கிய வீதிகள் அனைத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் வெளி நபர்களின் வருகையை முழுமையாக கண்காணிக்க முடிகிறது. ஊராட்சி மன்றத்தலைவரின் முயற்சியால் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை படிப்படியாக ஊராட்சிக்குட்பட்ட அனைத்து கிராங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார். இதனை முன்மாதிரியாகக் கொண்டு அனைத்து கிராமப்பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதை கட்டாயமாக்க வேண்டும்.
இவ்வாறு சமூக ஆர்வலர்கள் கூறினர்.