நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.10½ லட்சத்தில் கண்காணிப்பு கேமராக்கள்


நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.10½ லட்சத்தில் கண்காணிப்பு கேமராக்கள்
x
திருப்பூர்


தாராபுரம் கொளத்துபாளையம் பேரூராட்சி பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் மூலமாக ரூ.10½ லட்சம் செலவில் பொருத்தப்பட்ட 52 கண்காணிப்பு கேமரா பயன்பாட்டை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் தொடங்கி வைத்து ஆய்வு செய்தார்கள்.

கண்காணிப்பு கேமராக்கள்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள கொளத்துப்பாளையம் பேரூராட்சியில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி நகர்ப்புற பகுதிகளின் வளர்ச்சிக்காக நமக்கு நாமே திட்டம் அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் செயல்படுத்தப்படுகிறது. இதற்கு குறிப்பிட்ட அளவு நிதி பங்களிப்பை அளிக்கும் நபர்களுக்கு ஆண்டுதோறும் பரிசுகள் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

அந்த வகையில் நேற்று கொளத்துப்பாளையம் பேரூராட்சி முழுவதும் புதிய 52 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம் பணி கடந்த மாதம் 1-ந்தேதி தொடங்கப்பட்டது. இவற்றின் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு தயார் நிலையில் வைக்கபட்டிருந்தன.

அமைச்சர்கள்

இதனை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் ஆய்வு செய்து மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கிவைத்தார்கள்.

அப்போது அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-

கிராம புறங்களில் பெரும்பாலான மக்கள் வீட்டை பூட்டி விட்டு வயல்வெளிகளுக்கு சென்று விடுகின்றனர். இதனை பயன்படுத்தி திருடர்கள் நோட்டமிட்டு திருட்டு சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். அதனை தவிர்க்க கண்காணிப்பு கேமராக்கள் கட்டாய தேவை ஏற்படுகிறது.

கொளத்துப்பாளையம் பேரூராட்சி பகுதியில் இதனை தடுத்து இனிமேல் குற்ற செயல்கள் நடக்காமல் இருக்க வேண்டி பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா மூலம் குற்றவாளிகள் எளிதில் கண்டுபிடித்து விடலாம். நமக்கு நாமே திட்டத்தின் மூலமாக ஊர் பொதுமக்கள் சார்பில் ரூ.3½லட்சம் மேலும் அரசு பொது நிதியிலிருந்து ரூ.7 லட்சம் பெற்று தற்போது ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கரூர் மெயின் ரோட்டில் இருந்து பள்ளிவாசல் தெரு, ஆலமரவீதி, நடுவீதி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

திறப்பு விழாவில் பேரூராட்சி தலைவர் சுதா கருப்புசாமி, பேரூராட்சி செயல் அலுவலர் திருமலைகுமார், பேரூராட்சி துணை தலைவர் கே.கே.துரைசாமி, தாராபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ்.வி.செந்தில் குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அல்ட்ரா விக்னேஷ் செய்திருந்தார்.


Next Story