கெங்கையம்மன் கோவில் தேரோட்டம்


கெங்கையம்மன் கோவில் தேரோட்டம்
x

குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து தேரை இழுத்தனர்.

வேலூர்

தேரோட்டம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. தேர் திருவிழா மற்றும் கெங்கையம்மன் சிரசு திருவிழா நடத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. நேற்று காலை கெங்கையம்மன் கோவில் தேரோட்டம் தொடங்கியது. தேரோட்டத்தை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அலங்காரமும், சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து உற்சவருக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனை செய்யப்பட்டு தேரில் எழுந்தருளினார்.

அதைத்தொடர்ந்து தேரோட்டம் தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக தேர் இழுக்கப்பட்டது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாவிளக்கு தீபம் ஏந்தி வந்தனர். தொடர்ந்து மிளகு, உப்பு ஆகியவற்றை தேரின் மீது எறிந்தனர். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நேர்த்திக் கடனுக்காக தேரில் அம்மனிடம் வைத்து வழிபட்டனர்.

மாலை 4 மணி அளவில் தேர் தரணம்பேட்டை பிள்ளையார் கோவில் அருகே வந்தடைந்தது. மீண்டும் மாலையில் அங்கிருந்து புறப்பட்டு இரவு நிலையை அடைந்தது.

பாதுகாப்பு

தேரோட்டம் தொடக்க நிகழ்ச்சியில் ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் பார்வையிட்டார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கோடீஸ்வரன், பாஸ்கரன் தலைமையில், குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி உள்பட 1,700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை குடியாத்தம் உதவி கலெக்டர் எம்.வெங்கட்ராமன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சி.லட்சுமணன், உதவி ஆணையர் சி.நித்யா, கோவில் நிர்வாக அதிகாரி டி.திருநாவுக்கரசு, ஊர் நாட்டாண்மை ஆர்.ஜி.எஸ்.சம்பத், கவுரவ தர்மகர்த்தா கே.பிச்சாண்டி உள்பட விழாக்குழுவினர், இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.

மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் வெங்கடாஜலபதி தலைமையில் உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், மின்பணியாளர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் தேர் செல்லும் பாதையில் மின் ஒயர்களை துண்டித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேர் சென்ற பின் அந்தப்பாதைகளில் துண்டிக்கப்பட்ட இணைப்புகளை மீண்டும் உடனுக்குடன் வழங்கினார்கள்.

தேரோட்டம் மற்றும் கெங்கையம்மன் சிரசு திருவிழாவை முன்னிட்டு நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. தண்ணீர்பந்தல், அன்னதானம் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

ஒரு மணி நேரம் தாமதம்

வழக்கமாக தேரோட்டம் காலை சுமார் 9 மணி அளவில் தொடங்கும். ஆனால் நேற்று காலையில் வழக்கம் போல் உற்சவருக்கு சிறப்பு பூஜைகளும், அலங்காரமும் செய்யப்பட்டது. ஆனால் உற்சவரை வழக்கம் போல் இருக்கும் இடத்தில் வைத்துவிட்டு தேரில் அலங்கரிக்க கொண்டு செல்லவில்லை.

விழா குழுவினர் கெங்கையம்மன் கோவில் அருகே உள்ள ஆற்றில் வழக்கமாக ராட்சத ராட்டினம் அமைப்பார்கள். இந்த ஆண்டு அதற்காக மனு அளித்தும் அனுமதி தரவில்லை. ராட்டினத்திற்கு அனுமதி அளித்தால்தான் தேரோட்டம் தொடங்கும் என தெரிவித்து தேரோட்டத்தை தொடங்கவில்லை. சுமார் ஒரு மணி நேரம் கடந்தும் தேரோட்டம் தொடங்காததால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்தது.

இதனைத் தொடர்ந்து குடியாத்தம் உதவி கலெக்டர் வெங்கட்ராமன், துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி உள்ளிட்டோர் விழா குழுவினரிடம் ராட்டினம் அமைக்க அனுமதி அளிப்பது குறித்து வருவாய்த் துறையினர், உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். உரிய நேரத்தில் தேரோட்டத்தை தொடங்குங்கள் என கேட்டுக்கொண்டனர். இதனை தொடர்ந்து சுமார் ஒரு மணி நேர காலதாமதத்திற்கு பின் தேரோட்டம் தொடங்கியது.

மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு

தேரோட்டம் தொடங்க ஒரு மணி நேரத்திற்கு மேலாக காலதாமதம் ஏற்பட்டதை தொடர்ந்து வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவின் பேரில் நேற்று மதியம் குடியாத்தம் ஆற்றில் ராட்டினம் அமைய உள்ள இடத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

தொடர்ந்து கெங்கையம்மன் கோவிலில் பக்தர்கள் செல்லும் வழிகளில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது குடியாத்தம் உதவி கலெக்டர் வெங்கட்ராமன், இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் லட்சுமணன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பன்னீர்செல்வம், நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு, தாசில்தார் விஜயகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

அதிகாரிகள் மற்றும் ராட்டினம் அமைப்பார்களிடம் பேசிய மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி ராட்டினம் அமைப்பதற்கான விதிமுறைகளை பூர்த்தி செய்த பின், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அனைத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். குறிப்பாக காப்பீடு செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் முறையாக பின்பற்றிய பின் அனுமதி வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இதனைத் தொடர்ந்து ராட்டினம் அமைப்பாளர்கள் உடனடியாக ஆயுள் காப்பீடு மற்றும் பாதுகாப்பு அம்சங்களை பூர்த்தி செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.


Next Story