பழனி விடுதியில் கேரள தம்பதி தற்கொலை


பழனி விடுதியில் கேரள தம்பதி தற்கொலை
x

கடன் பிரச்சினையால், பழனி விடுதியில் கேரள தம்பதி தற்கொலை செய்து கொண்டனர். உருக்கமான கடிதம் சிக்கியது.

திண்டுக்கல்

கேரள தம்பதி

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுகுமாறன் (வயது 66). மளிகை கடைக்காரர். அவருடைய மனைவி சத்தியபாமா (62). இந்த தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனர். கடைசி மகனான சதீசுடன், சுகுமாறன்-சத்தியபாமா தம்பதி வசித்து வந்தனர்.

சுகுமாறன் வங்கிகளில் கடன் வாங்கி இருந்ததாகவும், அதனை திருப்பி செலுத்த முடியாமல் அவர் அவதிப்பட்டதாகவும் தெரிகிறது. மேலும் இது தொடர்பாக அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது.

இந்தநிலையில் தனது மகன் சதீஷிடம், கோத்தகிரியில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறி சுகுமாறனும், சத்தியபாமாவும் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்றனர். ஆனால் அவர்கள் அங்கு செல்லவில்லை.

பழனி தங்கும் விடுதி

திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு 2 பேரும் வந்தனர். பழனி அடிவாரம் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினர். பின்னர் அவர்கள், பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இரவில் சாப்பிட்டு முடித்துவிட்டு மீண்டும் விடுதி அறைக்கு திரும்பினர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சதீஷ், கோத்தகிரியில் உள்ள உறவினரிடம் தனது பெற்றோர் அங்கு வந்தார்களா? என்று கேட்டார். ஆனால் அவர் இங்கு யாரும் வரவில்லை என்று தெரிவித்தார். இதனால் சதீஷ் அதிர்ச்சி அடைந்தார்.

இதற்கிடையே சுகுமாறன், தான் பழனியில் தங்கி உள்ள விடுதியின் புகைப்படத்தை வாட்ஸ்-அப்பில் கோத்தகிரியில் உள்ள தனது உறவினருக்கு அனுப்பினார். இதனால் சுகுமாறனும், சத்தியபாமாவும் பழனியில் தங்கியிருப்பது தெரியவந்தது.

தூக்குப்போட்டு தற்கொலை

இதுபற்றி சதீஷிடம், கோத்தகிரியில் உள்ள உறவினர் தகவல் தெரிவித்தார். கோத்தகிரி செல்வதாக கூறி விட்டு, எதற்காக அவர்கள் பழனிக்கு சென்றனர் என்று சதீஷ் குழப்பம் அடைந்தார்.

இதனையடுத்து சதீசும், அவருடைய உறவினரும் நேற்று அதிகாலை பழனிக்கு வந்தனர். பின்னர் அவர்கள், சுகுமாறன் விடுதியில் தங்கியிருந்த அறைக்கு சென்றனர். கதவை நீண்டநேரம் தட்டியும் அறை திறக்கப்படவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள், இதுகுறித்து பழனி டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர், கதவை உடைத்து அறைக்குள் சென்று பார்த்தனர்.

அப்போது அங்குள்ள மின்விசிறியில், ஒரே சேலையில் சுகுமாறன்-சத்தியபாமா ஆகியோர் தூக்கில் பிணமாக தொங்கினர். அவர்கள் 2 பேரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.

உருக்கமான கடிதம்

இதைத்தொடர்ந்து 2 பேரின் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர்கள் தங்கியிருந்த அறையை போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது சுகுமாறன் எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று சிக்கியது. அந்த கடிதம், மலையாளத்தில் எழுதப்பட்டிருந்தது. அதில் தங்களுக்கு வங்கி கடன் பிரச்சினை இருப்பதாகவும், அந்த கடனை திருப்பி செலுத்த முடியாததால் தற்கொலை செய்யும் முடிவை எடுத்ததாகவும் தெரிவித்து இருந்தார். மேலும் தங்களது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்று கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் பிரச்சினையால் பழனி தங்கும் விடுதியில் கேரள தம்பதி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story