ரெயில்வே பாதுகாப்பு படைவீரர் தாக்கியதாக கேரள பக்தர் புகார்
பழனி ரெயில் நிலையத்தில், ரெயில்வே பாதுகாப்பு படைவீரர் தாக்கியதாக கேரள பக்தர் புகார் அளித்துள்ளார்.
கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் ராமபத்ரன் (வயது 47). தீவிர முருக பக்தரான இவர், நேற்று முன்தினம் பழனி முருகன் கோவிலுக்கு வந்து முடிகாணிக்கை செலுத்தினார். பின்னர் மலைக்கோவிலுக்கு சென்று சாமிதரிசனம் செய்தார். அதன்பிறகு அவர் கொல்லம் செல்வதற்காக ரெயில் வசதி இருக்கிறதா? என்று கேட்க பழனி ரெயில் நிலையத்துக்கு இரவு 8.30 மணிக்கு சென்றுள்ளார்.
அங்கு ரெயில் நிலையத்தின் நுழைவுவாயில் பகுதியில் அமர்ந்து இருந்த சில பயணிகளை, ரெயில்வே பாதுகாப்பு படைவீரர் ஒருவர் துரத்தியதாக தெரிகிறது. அப்போது அங்கு சென்ற ராமபத்ரனை பஸ் நிலையத்துக்கு செல்லும்படி கூறியதோடு, அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் காயமடைந்த ராமபத்ரன், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதையடுத்து தன்னை தாக்கிய ரெயில்வே பாதுகாப்பு படைவீரர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, திண்டுக்கல் ரெயில்வே பாதுகாப்பு படை அலுவலகத்தில் நேற்று அவர் புகார் அளித்தார்.