ஊழியரின் ஸ்கூட்டரை தவறுதலாக எடுத்து சென்ற கேரள அதிகாரி
குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் ஊழியரின் ஸ்கூட்டரை கேரள விவசாயத்துறை அதிகாரி தவறுதலாக எடுத்து சென்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
குழித்துறை:
குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் ஊழியரின் ஸ்கூட்டரை கேரள விவசாயத்துறை அதிகாரி தவறுதலாக எடுத்து சென்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
கேரள அதிகாரி
குழித்துறையை சேர்ந்த ஒருவர் கேரளாவில் விவசாயத்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் தனது சொந்த வேலை காரணமாக நேற்று விடுப்பு எடுத்து இருந்தார். இதையடுத்து அவர் வீட்டு வரி செலுத்துவதற்காக தனது நண்பர் ஒருவரின் ஸ்கூட்டரை வாங்கிக்கொண்டு வெட்டுமணியில் உள்ள குழித்துறை நகராட்சி அலுவலகத்திற்கு வந்தார்.
அங்கு வீட்டு வரி செலுத்த முயன்ற போது ரூ.50 குறைவாக இருந்தது. இதனால் பரபரப்படைந்த அந்த விவசாய அதிகாரி வீட்டுக்கு சென்று தேவையான பணத்தை எடுப்பதற்காக அவசரமாக அலுவலகத்திற்கு வெளியே வந்தார்.
அங்கு தான் வந்த ஸ்கூட்டரை போன்று நின்ற மற்றொரு ஸ்கூட்டரை எடுத்து கொண்டு வீட்டுக்கு அவசரமாக புறப்பட்டார். அவரது கையில் இருந்த சாவி அந்த ஸ்கூட்டருக்கு பொருந்தியதால் அவருக்கு சந்தேகம் ஏற்படவில்லை.
ஸ்கூட்டரை காணாமல் அதிர்ச்சி
வீட்டிற்கு சென்று பணம் எடுத்த பின்பு வரும் வழியில் குழித்துறை மகாதேவர் கோவில் சார்பில் அங்குள்ள ஒரு அரங்கத்தில் அன்னதான நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. உடனே அதிகாரி அந்த அரங்கத்தின் வெளியே ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு உள்ளே சென்று அன்னதானம் சாப்பிட்டார். பின்னர், வெளியே வந்து தனது நண்பரின் ஸ்கூட்டரை தேடிய போது அதை காணாமல் அதிர்ச்சி அடைந்தார்.
அதை யாரோ திருடி சென்றிருக்கலாம் என கருதிய அவர் ஆலய நிர்வாகத்திடமும், நண்பரிடமும் தகவல் தெரிவித்தார். தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். ஆனால் ஸ்கூட்டர் திருட்டு போனதற்கான எந்த தடயமும் இல்லை.
நகராட்சி ஆவணங்கள்
தொடர்ந்து அங்கு நின்ற ஸ்கூட்டரில் உள்ள பெட்டியை திறந்து பார்த்தபோது நகராட்சி சம்பந்தமான சில ஆவணங்கள் இருந்தன. அப்போதுதான் அந்த விவசாய அதிகாரிக்கு தான் நகராட்சிக்கு சென்ற போது ஒருவேளை அங்கிருந்து ஊழியரின் வேறொரு ஸ்கூட்டரை தவறுதலாக எடுத்து வந்திருக்கலாம் என்று உணர்ந்தார். இதையடுத்து நண்பருடன் அந்த ஸ்கூட்டரில் குழித்துறை நகராட்சி அலுவலகத்திற்கு புறப்பட்டார்.
இதற்கிடையே குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஊழியர் தனது ஸ்கூட்டரை காணாமல் தேடிக்கொண்டிருந்தார். இதுகுறித்து அவர் போலீசில் புகார் அளிக்க முடிவு செய்திருந்தார். இந்த நிலையில் விவசாய அதிகாரி ஸ்கூட்டரில் நண்பருடன் நகராட்சி அலுவலகம் சென்று சேர்ந்தார்.
பரபரப்பு
அவர் தான் தவறுதலாக ஸ்கூட்டரை எடுத்து சென்றதாக கூறி மன்னிப்பு கேட்டார். இருதரப்பினரும் நிலைமையை புரிந்து கொண்டு ஒருவருக்கொருவர் தங்களுடைய ஸ்கூட்டர்களை அடையாளம் கண்டு பெற்றுக்கொண்டனர்.
திரைப்பட நகைச்சுவை பாணியில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.