கபடி போட்டியில் கேரள அணி முதல் இடம் பிடித்தது


கபடி போட்டியில் கேரள அணி முதல் இடம் பிடித்தது
x

குடியாத்தம் அருகே நடந்த தென்னிந்திய அளவிலான கபடி போட்டியில் ஆண்கள் பிரிவில் கேரளா அணியும், பெண்கள் பிரிவில் ஒட்டன் சத்திரம் அணியும் முதல் இடம் பிடித்தன.

வேலூர்

கபடி போட்டி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கல் கிராமத்தில் தென்னிந்திய அளவிலான கபடி போட்டிகள் நான்கு நாட்கள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் 44 ஆண்கள் அணிகள், 28 பெண்கள் அணிகள் என மொத்தம் 72 அணிகள் பங்கேற்றன. புரோ கபடி லீக்கில் விளையாடிய வீரர்கள், வீராங்கனைகளும் பங்கேற்றனர்.

கபடி போட்டிகள் கடந்த வியாழக்கிழமை இரவு தொடங்கியது. நேற்று காலையில் பெண்கள் பிரிவுக்கான இறுதிப் போட்டிகளை தி.மு.க. மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

கேரளா அணி வெற்றி

பெண்கள் பிரிவில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த சண்முகா மெமோரியல் வெண்ணிலா கபடி குழு அணி முதல் இடமும், அந்தியூர் சக்தி பிரதர்ஸ் அணி இரண்டாம் இடமும், மூன்றாம் இடம் கூட்டாக நெல்லை பாரதி ஸ்போர்ட்ஸ் கிளம்பும், சென்னை சிட்டி போலீஸ் அணியும் பெற்றது.

இரவு நடைபெற்ற ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் கேரளா காசர்கோடு ஜே.கே.அகாடமி, சென்னை வேல்ஸ் பல்கலைக்க அணி மோதின. இதில் கேரளா ஜே.கே. அகாடமி அணி வெற்றி பெற்றது. சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகம் இரண்டாம் இடம் பெற்றது. பெங்களூரு மதராஸ் என்ஜினீயரிங் குரூப்ஸ் ராணுவ அணியும், அளந்தகரை ஏ டூ இசட் அணியும் கூட்டாக மூன்றாம் இடம் பெற்றன.

ரூ.1 லட்சம் பரிசு

தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்ற கேரளா ஜி.கே. அகாடமி அணிக்கு ரூ.ஒரு லட்சம் மற்றும் கோப்பை வழங்கினார். இரண்டாம் இடம் பெற்ற வேல்ஸ் பல்கலைக்கழக அணிக்கு கோப்பையும், ரூ.75 ஆயிரம் வழங்கினார்.

பெண்கள் பிரிவில் முதலிடம் பெற்ற சண்முகா மெமோரியல் வெண்ணிலா கபடி குழு அணிக்கு ரூ.50 ஆயிரம், கோப்பையும், இரண்டாம் பரிசு பெற்ற அந்தியூர் சக்தி பிரதர் அணிக்கு ரூ.30 ஆயிரம், கோப்பையும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட கபடி கழக நிர்வாகிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story