தூத்துக்குடியில் மீன்பிடிக்க தயாராகி வரும் விசைப்படகு மீனவர்கள்


தூத்துக்குடியில் தடைக்காலம் முடிவடைய உள்ளதால் மீனவர்கள் மீன்பிடிக்க தயாராகி வருகின்றனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் தடைக்காலம் இன்றுடன் முடிவடைவதை முன்னிட்டு விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.

தடைக்காலம்

மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த காலத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இந்த ஆண்டுக்கான 61 நாள் மீன்பிடித் தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகம், வேம்பார், தருவைகுளம் ஆகிய இடங்களில் உள்ள மொத்தம் 543 விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இந்த 61 நாட்களிலும் மீனவர்கள் தங்கள் படகுகளை சீரமைத்தல், வலைகளை சரி செய்தல் போன்ற பணிகளை மேற்கொண்டனர்.

தயார்

மேலும் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தை ஆழப்படுத்தும் பணி நடைபெற்று வருவதால் கடந்த பிப்ரவரி மாதம் முதலே மீன்பிடி துறைமுகத்தில் உள்ள விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. மீன்பிடித் தடைக்காலம் இன்று (செவ்வாய்க்கிழமை) முடிவடைவதை தொடர்ந்து சுமார் 4 மாதங்களுக்கு பிறகு நாளை (புதன்கிழமை) முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் தயாராகி வருகின்றனர்.

விசைப்படகுகளில் டீசல் நிரப்புதல் போன்ற பணிகளில் மீனவர்கள் நேற்று ஈடுபட்டனர். படகுகளில் ஐஸ் கட்டிகளை ஏற்றுதல், வலைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றுதல் போன்ற பணிகளை இன்று மேற்கொள்கின்றனர். தொடர்ந்து நாளை அதிகாலை விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர். தடைக்காலம் முடிந்து கடலுக்கு செல்வதால் மீன்கள் அதிக அளவில் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் மீன்வர்கள் தயாராகி வருகின்றனர்.


Next Story