சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கின் முக்கிய சாட்சி: கண்காணிப்பு கேமரா பதிவுகளை உறுதி செய்த பெண் போலீஸ் ரேவதி -சம்பவங்களை நீதிபதியிடம் விளக்கினார்


சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கின் முக்கிய சாட்சி: கண்காணிப்பு கேமரா பதிவுகளை  உறுதி செய்த பெண் போலீஸ் ரேவதி -சம்பவங்களை நீதிபதியிடம் விளக்கினார்
x

சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கு சம்பந்தமாக கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் குறித்து, இந்த வழக்கின் முக்கிய சாட்சி பெண் போலீஸ் ரேவதிக்கு திரையிட்டு காண்பித்து, உறுதிப்படுத்தப்பட்டது. அது சம்பந்தமான சம்பவங்களை நீதிபதியிடம் அவர் விளக்கினார்.

மதுரை


சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கு சம்பந்தமாக கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் குறித்து, இந்த வழக்கின் முக்கிய சாட்சி பெண் போலீஸ் ரேவதிக்கு திரையிட்டு காண்பித்து, உறுதிப்படுத்தப்பட்டது. அது சம்பந்தமான சம்பவங்களை நீதிபதியிடம் அவர் விளக்கினார்.

சாத்தான்குளம் வழக்கு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020-ம் ஆண்டு விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு போலீசார் கடுமையாக தாக்கியதில் இருவரும் படுகாயம் அடைந்து இறந்தனர்.

இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. வழக்குபதிவு செய்தது. இந்த வழக்கில் சாத்தான்குளம் போலீஸ் நிலைய அப்போதைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், போலீஸ்காரர்கள் முருகன், முத்துமுருகன் உள்பட 9 போலீசார் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

பெண் போலீஸ் வாக்குமூலம்

இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக சாத்தான்குளம் போலீஸ்நிலையத்தில் பணியாற்றிய பெண் போலீஸ் ரேவதி சேர்க்கப்பட்டு உள்ளார். ஜெயராஜ், பென்னிக்ஸ் இறந்த விவகாரத்தில் நடந்த சம்பவத்தை முழுமையாக மாஜிஸ்திரேட்டுவிடம் அப்போதே தனது வாக்குமூலமாக அளித்திருந்தார். அவரது சாட்சியம்தான் இந்த வழக்கின் பிரதானமாக கருதப்படுகிறது.

ரேவதி ஆஜர்

இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதி நாகலட்சுமி, முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் முக்கிய சாட்சியான ரேவதி ஆஜரானார். இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 9 போலீசாரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவரிடம், 19.6.2020 அன்று சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை அவர்களின் கடையில் இருந்து போலீசார் விசாரணைக்காக அழைத்துச் செல்வது, பின்னர் போலீஸ்நிலையத்தில் இருந்து சாத்தான்குளம் மருத்துவமனையில் பரிசோதனைக்கு அழைத்து செல்லும் காட்சிகள், ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் செல்லும் போது, பென்னிக்ஸ் நண்பர்கள் அந்த வாகனத்தை பின்தொடர்ந்து செல்வது, மறுநாள் அவர்கள் தந்தை-மகன் ரத்தக்கறை படிந்த உடைகளுடன் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்படுவது உள்ளிட்ட இந்த சம்பவம் தொடர்பான அனைத்து வீடியோ காட்சிகளும் திரையிட்டு காண்பிக்கப்பட்டன. அந்த வீடியோக்களில் இருந்த போலீசார் யார், யார் என்பதை ரேவதி கோர்ட்டில் தெரிவித்தார்.

அடையாளம் காண்பித்தார்

பின்னர் அவர்கள் இருவரையும் போலீசார் லாக்அப் அறையில் வைத்து தாக்குவதற்கு பயன்படுத்திய லத்தி, கம்புகளை அடையாளம் காண்பித்து, நடந்த சம்பவங்கள் குறித்து நீதிபதியிடம் விளக்கி கூறினார்.

இதைபதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை வருகிற 20-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.


Next Story