புளியடியில் கூடுதலாக ரூ.45 லட்சத்தில் கியாஸ் தகன மையம்
நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் புளியடியில் கூடுதலாக ரூ.45 லட்சம் செலவில் கியாஸ் தகன மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை 15 நாட்களில் பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் புளியடியில் கூடுதலாக ரூ.45 லட்சம் செலவில் கியாஸ் தகன மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை 15 நாட்களில் பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
புளியடி தகன மையம்
நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் புளியடியில் மின்சார தகன மையம் அமைக்கப்பட்டது. இந்த தகன மையம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பிருந்து மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த தகன மையத்தில் பூங்கா மற்றும் ஈமச்சடங்குகள் செய்வதற்கான வசதிகள் அனைத்தும் உள்ளன. முதலில் மின்சார தகன மையமாக அமைக்கப்பட்டாலும், பின்னர் கருவேல குச்சிகளின் மூலம் உருவாகும் கியாசை நெருப்பாக்கி உடல்கள் தகனம் செய்யப்பட்டு வந்தன. அதாவது ஒரு பெட்டியில் கருவேலமரக் குச்சிகளை அடுக்கி மூட்டம்போட்டு இதில் இருந்து கிளம்பும் புகையில் நெருப்பை உருவாக்கி, 'கியாஸிபயர்' முறையில் உடல்கள் தகனம் செய்யப்பட்டு வந்தன.
இதனை சேவை அடிப்படையில் சேவாபாரதி அமைப்பைச் சேர்ந்தவர்கள் நிர்வகித்து வருகிறார்கள். அவர்கள் ஒரு உடலை எரியூட்ட ரூ.2500-ஐ கட்டணமாக வசூலித்து வருகிறார்கள். இந்த தகன மையத்துக்கு வாரம் ஒன்றுக்கு சராசரியாக 10 உடல்கள் எரியூட்டப்பட்டு வருகின்றன. கொரோனா காலத்தில் இந்த தகன மையத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்கள் அதிக அளவில் எரிக்கப்பட்டன. கொரோனா தொற்று பரவல் காலத்தில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த 600-க்கும் மேற்பட்ட உடல்கள் எரிக்கப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
பயன்பாட்டுக்கு வருவது எப்போது?
இந்த தகன முறையில் முதலில் ஒரு உடலை எரிக்க 2½ மணி நேரமும், அதன் பிறகு எரிக்கப்படும் உடல்களுக்கு நேர அளவு குறையும். இந்தநிலையில் புளியடி தகன மையத்தில் எல்.பி.ஜி. கியாஸ் மூலம் உடல்களை எரிப்பதற்கான தகன மையம் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டது. அதன்படி ரூ.45 லட்சம் செலவில் ஏற்கனவே உள்ள தகன மையத்துக்கு அருகிலேயே கியாஸ் முறையில் எரிக்கப்படும் தகன மேடை அமைக்கும் பணி நடந்தது. இந்த பணி தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த தகன மேடையில் புகைக்கூண்டு அமைக்கும் பணி மட்டும் நடைபெற வேண்டியது உள்ளது. அருகில் செல்லும் மின்கம்பிகளை மாற்றியதும் இந்த பணிகள் முடிக்கப்படும் என கூறப்படுகிறது.
கியாஸ் முறையில் உடல்களை தகனம் செய்வதற்கு தேவையான எந்திரங்கள் அனைத்தும் பொருத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளன. மேலும் கியாஸ் சிலிண்டர்கள் இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தகன மேடையில் பரிசோதனை அடிப்படையில் ஒரு உடலை எரித்து சோதனை செய்ய வேண்டி உள்ளது. அது முடிந்ததும் இந்த தகன மேடையில் உடல்களை எரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. அதாவது இன்னும் 15 நாட்களில் இந்த தகன மேடை மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று மாநகராட்சி என்ஜினீயர் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.