3 வயது குழந்தையை கடத்திய 3 பேர் கைது


3 வயது குழந்தையை கடத்திய  3 பேர் கைது
x

தக்கலை அருகே கணவன், மனைவி பிரிந்த விவகாரத்தில் 3 வயது குழந்தையை கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். தந்தை தொடர்ந்து தலைமறைவாக உள்ளார்.

கன்னியாகுமரி

தக்கலை:

தக்கலை அருகே கணவன், மனைவி பிரிந்த விவகாரத்தில் 3 வயது குழந்தையை கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். தந்தை தொடர்ந்து தலைமறைவாக உள்ளார்.

கணவரை விட்டு பிரிந்தார்

தக்கலை அருகே உள்ள பிலாங்காலை பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவருடைய மகள் ஜெயபிரியா (வயது 27). இவருக்கும், மணவாளக்குறிச்சியை சேர்ந்த பிபின் பிரியனுக்கும் (29) கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு 3 வயதில் ஆத்விக் பிரியன் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் கருத்து வேறுபாடு காரணமாக ஜெயபிரியா கடந்த 3 மாதத்திற்கு முன்பு கணவர் பிபின் பிரியனை விட்டு பிரிந்து சென்றார். அப்போது குழந்தை ஆத்விக் பிரியனையும் உடன் அழைத்துச் சென்றார்.

குழந்தை கடத்தல்

பிலாங்காலையில் உள்ள தன்னுடைய தந்தை வீட்டில் அவர் வசித்து வந்தார்.

இதனால் குழந்தையை தக்கலை அருகே கடமலைக்குன்றில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிரிகேஜி வகுப்பில் சேர்த்தார். மேலும் பள்ளிக்கு ஆத்விக் பிரியன் காரில் மற்ற குழந்தைகளுடன் சென்று வந்தான். அந்த காரை சுரேஷ் என்பவர் ஓட்டி வந்தார்.

நேற்று முன்தினம் காலையில் வழக்கம்போல் காரில் பள்ளிக்கு சுரேஷ் குழந்தைகளை அழைத்துச் சென்ற போது அதனை பின்தொடர்ந்தபடி சில கார்கள் சென்றன. கடமலைக்குன்று அருகே சென்றடைந்த போது திடீரென அந்த காரை அவர்கள் மறித்தது.

பின்னர் கார்களில் இருந்து திபு, திபுவென இறங்கிய கும்பல் டிரைவர் சுரேஷை இரும்பு கம்பியால் மிரட்டியது. தொடர்ந்து ஆத்விக் பிரியனை மட்டும் அங்கிருந்து கடத்திச் சென்றது.

பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தந்தை மீது புகார்

மேலும் இதுதொடர்பாக ஜெயபிரியா தக்கலை போலீசில் புகார் அளித்தார். அதில், கணவர் பிபின் பிரியன் கடத்தியிருக்கலாம் என தெரிவித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சாய்லெட்சுமி, சப் -இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும் பிபின் பிரியனின் செல்போன் சிக்னலை வைத்து கண்காணித்தனர். இதில் ஈத்தாமொழி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்திருந்த ஆத்விக் பிரியனை மீட்டனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், மனைவியிடம் இருந்த குழந்தையை அவருடைய தந்தை பிபின் பிரியன் கடத்தியது தெரியவந்தது.

3 பேர் கைது

இதுதொடர்பாக பிபின் பிரியன் உள்பட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இவர்கள் போலீசார் தேடுவதை அறிந்ததும் தலைமறைவானார்கள். இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சாய்லெட்சுமி தலைமையிலான தனிப்படை போலீசார் அந்த கும்பலை தேடிவந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை வெள்ளிச்சந்தை பகுதியில் அம்மாண்டிவிளையை சேர்ந்த முகேஷ் (23), மணவாளக்குறிச்சி சரண் (22), மதன் (21) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் இந்த கடத்தலுக்கு மூலக்காரணமான பிபின் பிரியன் உள்ளிட்ட கும்பலை தேடிவருகிறார்கள். தற்போது கைதான 3 பேரும் பிபின் பிரியனின் உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story