லோடு ஆட்டோவில் கடத்தப்பட்ட 20 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்


தூத்துக்குடியில் லோடு ஆட்டோவில் கடத்தப்பட்ட 20 மூட்டை ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் லோடு ஆட்டோவில் 20 மூட்டை ரேஷன் அரிசியை கடத்தியதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வாகன தணிக்கை

தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரத்லிங்கம் தலைமையில சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தட்டி அய்யன், ஏட்டு பூலையா நாகராஜன் ஆகியோர் தூத்துக்குடி திரு.வி.க.நகர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த ஒரு லோடு ஆட்டோவை வழிமறித்து சோதனை நடத்தினர்.

பறிமுதல்

அந்த லோடு ஆட்டோவில் தலா 50 கிலோ எடை கொண்ட 12 மூட்டைகளில் மொத்தம் 600 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்து கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர். இது குறித்து தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து, ரேஷன் அரிசியை கடத்தியதாக தூத்துக்குடி மேலசண்முகபுரம் 1-வது தெருவை சேர்ந்த இருதயராஜ் மகன் பாலகணேசன் (வயது 42), போல்டன்புரத்தை சேர்ந்த மைதீன் அப்துல்காதர் மகன் நாகூர் மைதீன் (46) ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 600 கிலோ ரேஷன் அரிசி மற்றும் லோடு ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story