லோடு ஆட்டோவில் கடத்தப்பட்ட 40 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்
பசுவந்தனையில் லோடு ஆட்டோவில் கடத்தப்பட்ட 40 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
ஓட்டப்பிடாரம்:
பசுவந்தனையில் லோடு ஆட்டோவில் கடத்தப்பட்ட 40 மூட்டை ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் ெசய்தனர். இந்த கடத்தலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ரேஷன் அரிசி கடத்தல்
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பசுவந்தனை, வடக்குகைலாசபுரம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக பசுவந்தனை போலீசாருக்கு தகவல் கிடைத்து. இதையடுத்து பசுவந்தனை சோதனை சாவடி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோவை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். இதில் தலா 50 கிலோ கொண்ட 40 மூட்டை ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
வாலிபர் கைது
இதையடுத்து வாகனத்தை ஓட்டி வந்தவரிடம் நடத்திய விசாரணையில், அவர் தூத்துக்குடி சில்வர்புரத்தை சேர்ந்த விஜயபாண்டி மகன் வெள்ளத்துரை (வயது 35) என்பது தெரியவந்தது. இதுகுறித்து பசுவந்தனை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அந்த ரேஷன் அரிசி மூட்டைகளையும், கடத்தலுக்கு பயன்படுத்திய லோடு ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
போலீசார் விசாரணை
தொடர்ந்து பசுவந்தனை போலீசார் ரேஷன் அரிசி மூட்டையுடன் லோடு ஆட்டோவையும், கைதான வாலிபரையும் தூத்துக்குடி உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் எங்கிருந்து ரேஷன் அரிசியை கடத்தி வந்தார்? இந்த பின்னணியில் வேறு யாரும் இருக்கிறார்களா? எங்கு கடத்தி செல்லப்பட்டது? என்பது குறித்து அப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.