தூத்துக்குடியில்மினி லாரியில் கடத்திய 3 ஆயிரம் லிட்டர் டீசல் பறிமுதல்:2 வாலிபர்கள் கைது
தூத்துக்குடியில்மினி லாரியில் கடத்திய 3 ஆயிரம் லிட்டர் டீசல் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் மினி லாரியில் கடத்திய 3 ஆயிரம் லிட்டர் டீசலை போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
கண்காணிப்பு
தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுராதா தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் பாரத்லிங்கம் மற்றும் செந்தட்டி அய்யன், பூலையா நாகராஜன் மற்றும் போலீசார் தூத்துக்குடியில் அத்தியாவசிய பொருட்கள் கடத்தப்படுகிறதா என்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
கைது
அப்போது, தூத்துக்குடி ரோச் பூங்கா அருகே சந்தேகப்படும்படியாக பேரல்களை ஏற்றி வந்த ஒரு மினிலாரியை வழிமறித்து சோதனை செய்தனர். அந்த மினி லாரியில் 20 பேரல்கள் இருந்தன. இதில் சுமார் 3 ஆயிரம் லிட்டர் டீசல் இருந்தது. இதற்கு முறையான ஆவணங்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் செயல்பட்டதாக, மினிலாரியை ஓட்டி வந்த டிரைவர் ஆலங்குளம் கோவிலூற்று பகுதியை சேர்ந்த மணிவேல்ராஜ் மகன் ரஞ்சித் (வயது 22), அதே பகுதியை சேர்ந்த செல்வம் (25) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் டீசலை புதூர்பாண்டியாபுரம் அருகே உள்ள மறைவான இடத்தில் நின்று கொண்டு இருந்த வாகனத்தில் இருந்து டீசலை பெற்று மீன்பிடி துறைமுகத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கடத்தி செல்வது தெரியவந்தது.
கலப்படம்?
இதைத் தொடர்ந்து தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் வழக்கு பதிவு செய்து 3 ஆயிரம் லிட்டர் டீசலை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த டீசலில் கலப்படம் செய்து, குறைந்த விலைக்கு படகுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனை தொடர்ந்து கைப்பற்றப்பட்ட டீசல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மதுரையில் உள்ள ஆய்வகத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பி உள்ளனர்.