ரியல் எஸ்டேட் அதிபர் காரில் கடத்தல்
கந்திகுப்பம் அருகே பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினையில் ரியல் எஸ்டேட் அதிபர் காரில் கடத்தப்பட்டார். இதையடுத்து அவரை மீட்க கந்திகுப்பம் போலீசார் புதுச்சேரி விரைந்துள்ளனர்.
பர்கூர்
கந்திகுப்பம் அருகே பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினையில் ரியல் எஸ்டேட் அதிபர் காரில் கடத்தப்பட்டார். இதையடுத்து அவரை மீட்க கந்திகுப்பம் போலீசார் புதுச்சேரி விரைந்துள்ளனர்.
காரில் கடத்தல்
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அருகே உள்ள பாலேப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பாபு (வயது 63). ரியல் எஸ்டேட் அதிபர். இவரிடம் புதுச்சேரியை சேர்ந்த சக்திவேல், சங்கர் ஆகியோர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளனர். சக்திவேல், சங்கர் ஆகியோரிடம் பாபு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொழில் ரீதியாக ரூ.5 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
ஆனால் பாபு பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனிடையே நேற்று காலை பாபு பாலேப்பள்ளியில் இருந்து வரட்டனப்பள்ளிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.
போலீசார் புதுச்சேரிக்கு விரைந்தனர்
அப்போது அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகில் சென்றபோது சக்திவேல், சங்கர் ஆகியோர் மோட்டார் சைக்கிளை வழிமறித்து பாபுவை காரில் கடத்தி கொண்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டனர். பின்னர் அவர்கள் பாபுவின் மனைவி ராஜேஸ்வரியை தொடர்பு கொண்டு பணத்தை கொடுத்தால் தான் உனது கணவரை விடுவிப்போம் என்று கூறி உள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து கந்திகுப்பம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபுவை மீட்க புதுச்சேரிக்கு சென்றுள்ளனர். பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் ரியல் எஸ்டேட் அதிபர் காரில் கடத்தப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.