கடத்தல் வழக்கு:குருத்திகா உறவினர்களின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
கடத்தல் வழக்கில் தொடர்புடைய குருத்திகா உறவினர்களின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது
தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் என்ஜினீயர் வினீத் மாரியப்பன். இவரும், இதே பகுதியை சேர்ந்த குருத்திகா என்ற பெண்ணும் காதலித்தனர். இதற்கு குருத்திகாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நாகர்கோவில் பகுதியில் அவர்கள் இருவரும் வினீத்தின் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்தனர். இதற்கிடையே குருத்திகா மாயமாகிவிட்டதாக குற்றாலம் போலீசில் அவரது பெற்றோர் புகார் அளித்தனர். இதுகுறித்த விசாரணைக்காக வினீத்-குருத்திகா ஆகியோர் போலீசில் ஆஜராகிவிட்டு, வினீத்தின் வீட்டுக்கு திரும்பினர். அந்த சமயத்தில் ஒரு கும்பல் வினீத்தை தாக்கிவிட்டு, குருத்திகாவை கடத்திச் சென்றது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்தனர். அதில், குருத்திகாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சேர்க்கப்பட்டனர். இதனால் அவர்கள் தலைமறைவானார்கள். சிலரை போலீசார் கைது செய்தனர். இந்தநிலையில் தங்கள் மீதான வழக்கில் முன்ஜாமீன் கேட்டு விஷால் போக்கர், கீர்த்திபடேல், சண்முகராஜ் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், இந்த முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.