மணவாளக்குறிச்சி அருகே பெற்றோருடன் தூங்கிய 7-ம் வகுப்பு மாணவி கடத்தல்
மணவாளக்குறிச்சி அருகே பெற்றோருடன் தூங்கிய 7-ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்ற தொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
குளச்சல்:
மணவாளக்குறிச்சி அருகே பெற்றோருடன் தூங்கிய 7-ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்ற தொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
7-ம் வகுப்பு மாணவி
நெல்லை மாவட்டம் ராதாபுரம் பண்டாரக்குளம் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதி கடந்த ஒரு வருடமாக குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடற்கரை பகுதியில் கூடாரம் அமைத்து தங்கி வருகின்றனர். இவர்களுடைய 14 வயது மகள் ராதாபுரத்தில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்தநிலையில் மாணவி பெற்றோரை பார்ப்பதற்காக வந்தார். நேற்று முன்தினம் இரவு அவர் பெற்றோருடன் அங்கேயே தூங்கினார். நேற்று காலையில் பெற்றோர் எழுந்து பார்த்த போது மாணவியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர். ஆனால் மாணவியை காணவில்லை.
வாலிபர் மீது புகார்
இதுகுறித்து மாணவியின் தாயார் குளச்சல் மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதில், தனது மகளை ஈத்தாமொழி அருகே சுண்டபற்றிவிளையை சேர்ந்த தேங்காய் வெட்டும் தொழிலாளியான செல்வகுமார் (35) என்பவர் கடத்தி சென்றதாக கூறியிருந்தார்.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், மாணவி மாயமான அன்று செல்வகுமாரும் மாயமாகியுள்ளார். எனவே அவர் தான் மாணவியை கடத்தி சென்றிருக்கலாம் என தெரியவந்தது. அதன் அடிப்படையில் செல்வகுமார் மீது கடத்தல் வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.